யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு (Videos)

270

50.01 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(12-03-2019) முற்பகல் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியகர் யோ.திவாகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் கிங் சட்டார்,யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரி டாக்டர் சபீனா அப்துல் லோவா, வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இ.தேவநேசன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மேற்படி சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

இந்தச் சிகிச்சைப் பிரிவு வடமாகாணத்தில் யுனிசெப் நிறுவனத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஐந்தாவது சிகிச்சைப் பிரிவாகும்.

யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளுடனும் கூடிய இரண்டாவது சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவு நேற்றைய தினம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்வுகளைத் தொடர்ந்து வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் மேல்மாடி மண்டபத்தில் ஒன்றுகூடலொன்றும் இடம்பெற்றது.

இந்த ஒன்றுகூடலில் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர், வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.கேதீஸ்வரன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி யோ. திவாகர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி நமசிவாயதேசிகர் சரவணபவா ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களுடன் யுனிசெப் நிறுவனத்தின் வடமாகாணப் பிரதம களப் பணி உத்தியோகத்தர் நடராஜா சுதர்மன்,வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன், வலி.வடக்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி நமசிவாயதேசிகர் சரவணபவா, தாதிய பரிபாலகர் சோ.இராஜேந்திரன்,வைத்தியசாலையின் வைத்தியர்கள், நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, விசேட தேவையுடைய குழந்தைகள் குறித்த சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்படவுள்ளதாக மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி யோ.திவாகரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து இந்தப் பிரிவுக்கான நிபுணத்துவ வைத்திய நிபுணர் எதிர்வரும் சித்திரை மாதமளவில் தமது கடமைகளைப் பொறுப்பேற்பார். இதன் பின்னர் இந்தப் பிரிவு மூலம் முழுமையானவளவில் சேவைகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி-}