மைத்திரியைக் காப்பாற்றிய ரணில்!!

85

இலங்கை ஜனாதிபதிக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்திருந்த போதும் வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே குறித்த நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பின் மீது நேற்றைய தினம்(13) குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றன.

இலங்கை ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக விவாதம் நடாத்தப்பட்டது.

நேற்று(13)முற்பகல்-10.30 மணிக்கு ஆரம்பமான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் உரையாற்றுகையில் ஜனாதிபதியை விமர்சித்துக் காட்டமான உரைகள் ஆற்றினர்.

விவாதங்களின் முடிவில் இலங்கை ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகள் தொடர்பாக வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமா? என சபாநாயகர் கரு ஜெயசூரிய கேள்வியெழுப்பிய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவும் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டியதில்லை எனத் தெரிவித்தனர்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனக் கோரியிருந்தார்.

அவரது எதிர்ப்பைப் பதிவு செய்து கொண்டு வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.