நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது ஜெனீவா தீர்மான வரைவு!

89

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, அயர்லாந்து, கனடா, ஜேர்மனி, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா ஆகிய ஆறு நாடுகள் இணைந்து, இலங்கை தொடர்பான தீர்மான வரைவை பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன. இந்த நிலையில் குறித்த வரைவுக்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளது.

இந் நிலையில் ஜெனீவா தீர்மான வரைவு அரசாங்கத்தின் சார்பில் அவை முதல்வர் லக்ஸ்மன் கி்ரியெல்லவினால் நேற்றைய தினம்(13) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் அவர் உரையாற்றுகையில், “இது சிறிலங்காவுக்கு சாதகமான நல்லதொரு தீர்மானம். இதில் ஏன் திருத்தம் செய்வதற்குச் சிலர் முற்படுகின்றனர் என்பது எனக்குத் தெரிய வேண்டும். எதற்காக இந்த வரைவை மாற்ற வேண்டும் என்று மகிந்த சமரசிங்கவிடம் கேட்கிறேன்?

நாங்கள் எமது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரத்துக்குப் பொறுப்புக்கள் உள்ளன. அதேபோன்று நாடாளுமன்றத்திலும் எமக்குப் பொறுப்புக்கள் உள்ளன. நீதிமன்றத்துக்கும் பொறுப்புக்கள் உள்ளன.

எமக்கான எல்லைகளை நாம் தெரிந்திருக்க வேண்டும். ஜனாதிபதி தமது எல்லையைப் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒருவருக்கொருவர் விரலை நீட்டினால் குழப்பம் தான் ஏற்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.