யாழ். வடமராட்சியில் பரபரப்பு: வீதியில் மீட்கப்பட்டது அபாய வெடிபொருட்கள்!! (Video)

479

யாழ்.வடமராட்சி இயக்கச்சி கொடுக்குளாய் அபாய வெளியேற்ற வீதியின் அருகே கொற்றாண்டர் குளத்தடிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை(14) பிற்பகல் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வீதியால் சென்ற வழிப்போக்கரொருவர் வீதியில் கடதாசிப் பெட்டியொன்றில் குறித்த வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்துள்ளார்.இதனையடுத்துப் பருத்தித்துறைப் பிரதேச உறுப்பினர் பிரசாந்தனுக்கு இது தொடர்பாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர் பிரதேசபை உறுப்பினரால் குடத்தனையிலுள்ள விசேட அதிரடி படையினருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவ் விடத்துக்குச் சென்ற விசேட அதிரடிப் படையினரும், இராணுவப் புலனாய்வாளர்களும் இணைந்து குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இதேவேளை,மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீதியால் தினமும் அதிகளவு பொதுமக்கள் பயணிப்பது மட்டுமல்லாமல் விறகு வெட்டவும் செல்கின்றமை வழக்கமாகும்.

பொதுமக்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

{நேரடி ரிப்போர்ட் மற்றும் காணொளி:- யாழ்.வடமராட்சியிலிருந்து பானு-}