கோடீஸ்வரன் எம்.பி மீது ஒழுக்காற்று நடவடிக்கை: டெலோ அதிரடி!

52

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென டெலோ கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் மத்திய அரசியல் குழுத் தீர்மானங்களுக்கு மாறாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் வாக்களித்துள்ளமையால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளதாக தமிழ்ப் பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

கல்முனை உபபிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என்ற வாக்குறுதி கிடைக்காமல் வாக்களிக்கக் கூடாதென கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால்,இத்தனையும் மீறி க.கோடீஸ்வரன் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

எனினும்,கட்சித் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை,குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும்,அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.