யாழ். கம்பன் விழா இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது! (Photos)

259

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா இன்று வெள்ளிக்கிழமை(15) பிற்பகல்-05.30 மணியளவில் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இம்முறை யாழ். கம்பன் விழா நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு கம்பன் கழகப் பெருந் தலைவர் ஜெ. விஸ்வநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள முதலாம் நாள் நிகழ்வு தட்ஷணாமூர்த்தி உதயசங்கர் குழுவினரின் மங்கல இசையுடன் ஆரம்பமாகும்.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மங்கள விளக்கேற்றுவார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ. வீ.கே.சிவஞானம் தொடக்கவுரையையும், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் வாழ்த்துரையையும் நிகழ்த்துவர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் “முதல் நூலும் முதன்மை நூலும்” எனும் தலைப்பில் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ்ஜின் நாட்டிய வேள்வி இடம்பெறும்.

இரண்டாம் நாள் நிகழ்வுகளின் காலை அமர்வு நாளை சனிக்கிழமை(16)காலை-09.30 மணியளவில் நல்லூர் கம்பன் கோட்டத்தில் இடம்பெறும்.

முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் இணைந்த வடகிழக்கு மாகாணங்களின் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலர் சுந்தரம் டிவகலாலா தொடக்கவுரை ஆற்றுவார்.

இதன்போது “திருப்புகழில் இராமாயணம்” எனும் பொருளில் ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் தலைமையில் “பண்பாட்டுக் கம்பன்” எனும் பொருளில் கருத்தரங்கம் நடைபெறும்.

இரண்டாம் நாள் நிகழ்வுகளின் மாலை அமர்வு நாளை சனிக்கிழமை பிற்பகல்-05.30 மணியளவில் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறும். வி.கே.பஞ்சமூர்த்தி குழுவினரின் மங்கல இசையுடன் ஆரம்பமாகும் இந்த நிகழ்வு இணைந்த வடகிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் தலைமையில் ஆரம்பமாகும்.

வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தொடக்கவுரை ஆற்றுவார். இதன்போது கம்பவாரிதி இ.ஜெயராஜ்ஜை நடுவராகக் கொண்டு “கற்போரைப் பெரிதும் கவர்பவள்…” எனும் தலைப்பிலான பட்டிமண்டபம் இடம்பெறும். காதல் சீதையே! எனும் தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் இரா. செல்வவடிவேல் ஆகியோரும், கடிமணச் சீதையே! எனும் தலைப்பில் இராம. செளந்தரவள்ளி மற்றும் ந. விஜயசுந்தரம் ஆகியோரும், கடுந்தவச் சீதையே! எனும் தலைப்பில் இரா. மது மற்றும் ஸ்ரீபிரசாந்தன் ஆகியோரும் வாதாடவுள்ளனர்.

மூன்றாம் நாள் நிகழ்வுகள் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(17) காலை-09.30 மணியளவில் நல்லூர் கம்பன் கோட்டத்தில் இடம்பெறவுள்ளது. வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ். மாநகர சபையின் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தொடக்கவுரை ஆற்றுவார்.

இதன்போது கம்பவாரிதி இ. ஜெயராஜ்ஜை நடுவராகக் கொண்டு “செந்தமிழின் சீர்மை சிறப்புறுவது” எனும் பொருளில் விவாத அரங்கு இடம்பெறும். கம்பனின் காதையிலேயே! எனும் தலைப்பில் இரா. மாது, கம்பனின் கவிதையிலேயே! எனும் தலைப்பில் இராம. செளந்தரவல்லி, கம்பனின் உவமையிலேயே! எனும் தலைப்பில் செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன், கம்பனின் அறத்திலேயே! எனும் தலைப்பில் ஸ்ரீபிரசாந்தன், கம்பனின் வர்ணனையிலேயே! எனும் தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் உரை நிகழத்தவுள்ளனர்.

மூன்றாம் நாள் நிகழ்வுகளின் மாலை அரங்க நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-05.30 மணி முதல் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தொடக்கவுரை நிகழ்த்துவார்.

இதன்போது “வேதனையாம் நம் நிலைமை விளம்புகிற போதை தரும் கம்பனது பொன்மொழிகள் ” எனும் பொருளில் ‘காப்பியக்கோ கவிஞர் ஜின்னா செரியூதீனை நடுவராகக் கொண்டு கவி அரங்கம் இடம்பெறும். “வீரம் காத்தலை வேண்டு” எனும் தலைப்பில் ச.முகுந்தனும், “சிந்தையாலும் தொடேன்” எனும் தலைப்பில் நாக. சிவசிதம்பரமும், ” இரக்கமது இழுக்கம்” எனும் தலைப்பில் சி.சிவகுமாரும், “யானே சூட்டுவன் மகுடம்” எனும் தலைப்பில் ஸ்ரீ.பிரசாந்தனும் உரையாற்றவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து “குற்றக் கூண்டில் இலங்கைத் தம்பதியர்கள்” எனும் பொருளில் கம்பவாரிதி இ. ஜெயராஜ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா மற்றும் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோரை நீதி ஆயமாகக் கொண்டு வழக்காடு மன்றம் நடைபெறும்.

இதன்போது “இக்கட்டில் விட்டுச் சென்ற விபீடணன் குற்றவாளி” எனும் தலைப்பில் பேராசிரியர் தி. வேல்நம்பி, சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் ஆகியோரும், ” உள்ளும் புறமும் வேறுபட்டு இயங்கிய கும்பகர்ணன் குற்றவாளி” எனும் தலைப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் இரா. மாது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் இராம. செளந்தரவள்ளி ஆகியோரும் வாதாடவுள்ளனர்.

யாழ்.கம்பன் விழா அகில இலங்கை கம்பன் கழகத்தால் கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டு வருகிறது. கம்பன் விழா இடம்பெறும் நாட்களில் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து மட்டுமல்லாது வெளிமாவட்டங்களிலிருந்தும் பல்துறை சார்ந்தவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வது வழமை.

இந்த வருடமும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளமையால் யாழ். கம்பன் விழா களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

{சிறப்புத் தொகுப்பு:- செல்வநாயகம் ரவிசாந்-}