யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சிறந்த விஞ்ஞானிகள் உருவாகுவார்கள்: பேராசிரியர் நம்பிக்கை! (Video)

246

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களில் பலர் எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாகுவார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டப்பின் கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் ஜி. மிகுந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகள் அபிவிருத்திப் பிரிவினரின் ஏற்பாட்டில் ஆய்வு தினம் அண்மையில் கல்லூரியின் சபாலிங்கம் கேட்போர் கூடத்தில் முதன்முறையாக இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மண்ணைச் சேர்ந்த வினோஜ்குமார் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு உலகளாவிய ரீதியில் அதிகளவு பரிசுகள் பெற்றுள்ளார்.அவர் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்பப் பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கிறார்.

வழக்கமாகக் கற்று முடிவடைந்த பின்னர் தான் புத்தாக்கம் செய்வதை அறிந்திருக்கின்றோம்.

ஆனால்,இவர் பீடத்திற்கு வரும் போதே நிறையப் புத்தாக்கங்களை மேற்கொண்டு அதற்கான பரிசுகளையும் பெற்றுள்ளார்.

தற்போது அவர் ஏனையோரை வளப்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன்னை மேலும் வளம்படுத்தினால் சிறந்ததொரு விஞ்ஞானியை இந்தத் தேசம் பெறும். அவரைப் போன்று இன்னும் பலர் எங்கள் தேசத்தில் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும்.

சிறந்த பெறுபேறு பெற்றவர் மாத்திரம் விஞ்ஞானியாகி விட முடியாது. நாங்கள் வழக்கமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒன்றைக் குறிப்பிடுவோம். ஒருவேளை விஞ்ஞானி ஜஸ்டீன் இருந்திருந்தால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் சட்டதிட்டங்களின் படி என்றும் அவரால் பேராசிரியராக உருவாக முடியாது.

இங்குள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் வைத்து நோக்கும் போது அவரிடம் அதற்கான தகுதிகள் காணப்படாது.

அவர் தலைசிறந்த விஞ்ஞானியாக மிளிர்ந்தமைக்கு காரணம் அவரது கண்டுபிடிப்புக்களை மக்கள பயன்படுத்தினார்கள். மக்கள் அவரை இனம் கண்டார்கள். இதன்மூலம் இந்தப் பூமி முழுவதுமாகப் பயன் பெற்றது.

நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் விஞ்ஞானியாக உருவாக முடியும். ஆய்வு என்பது தினம் தினம் உங்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. அதனை நீங்கள் ஒவ்வொருவரும் தட்டியெழுப்ப வேண்டும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு புத்தாக்கங்களையும் வெளியே கொண்டு வாருங்கள். அவ்வாறு வெளியே கொண்டு வரும் போது அவதானமாகவிருங்கள். தற்போதுள்ள உலகம் பிரதி பண்ணும் உலகமாகக் காணப்படுவதால் உங்கள் ஆக்கங்களை இன்னொருவர் பிரதி பண்ணாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கண்டுபிடிப்புக்களைப் பதிவு செய்வதன் மூலம் இலட்சக்கணக்கான வருவாய்களைத் தேடித் தரக் கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
குறிப்பாக உங்கள் கண்டுபிடிப்புக்களைத் தொழில்நுடபத் துறையில் பயன்படுத்துபவர்கள் உங்களிடம் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தக் கூடிய சூழலே காணப்படுகின்றது.

பணத்திற்காக செய்யப்படுவதில்லை ஆய்வுகள். தேவை கருதிய, இருக்கின்ற வளங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்றவளவுக்கு வாய்ப்புக்களை நீங்கள் தேடிச் சென்றால் எந்தவிடத்திலும் ஆய்வுகள் செய்யலாம்.

ஆறாம் தர மாணவரும் ஆய்வு செய்யலாம், க. பொ. த உயர்தரம் படித்தவரும் ஆய்வு செய்யலாம். வயது முதிர்ந்தவர் இறக்கின்ற தறுவாயிலும் ஆய்வு செய்யலாம். ஆய்வு செய்வதற்கு வயதெல்லை என்பது கிடையாது.

மொத்தத்தில் ஒருவர் தன்னைத் தான் உருவாக்கிக் கொள்வதற்கு ஆய்வுகள் என்பது முக்கியமானது.

கடந்த மாதம் “மீள் சுழற்சி செய்யக் கூடிய சக்தி” எனும் தலைப்பிலான மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் 120 வெளிநாட்டவர்கள் பங்கு கொண்டார்கள். அதிலே 100 பேர் எமது பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து போன விஞ்ஞானிகள். நோர்வே, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் அவர்கள் பணி புரிகின்றார்கள். அவர்கள் எங்களுடைய சொத்துக்கள். அவர்களுடைய அனுசரணை என்றும் எமக்குத் தேவை.

எங்களுடைய மாணவர்கள் ஆய்வுத் துறை சார்ந்து ஈடுபடுகின்ற போது எங்களூடாக அவர்களை அணுக முடியும். அதற்கான தொடர்புகளை எங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி பரிசோதனைக்குத் தேவையான ஆய்வு கூட வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி-}