யாழில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்வு (Video)

185

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையில் ஜனநாயகத்தின் எதிர்காலமும் எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் பெளர்ணமி தினமான நேற்றுப் புதன்கிழமை (20) பிற்பகல்-03.30 மணி முதல் இல-62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் தோழர் என். பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சேனாதீர குணத்திலக கலந்து கொண்டு பிரதான உரையாற்றினார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA )தொடர்பாக முழுமையாக ஆராயும் வகையிலான மேற்படி உரையைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிகழ்வில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மகேந்திரன்,மூத்த சட்டத்தரணி சோ. தேவராஜா,ஈழத்துத் திரைப்பட இயக்குனர் எஸ்.கேசவராஜா,ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம், மூத்த எழுத்தாளர் க.தணிகாசலம்,மூத்த தொழிற்சங்கவாதி இ.தவராஜாஉள்ளிட்டோர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாகத் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினர்.

இதன் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வடபிராந்திய செயலாளர் செ.கதிர்காமநாதன் , சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன்,சமூகச் செயற்பாட்டாளர் தர்மலிங்கம் ஸ்ரீபிரகாஸ்,சர்வதேச மார்க்சியக் குழுவின் தலைவர் சொ. சிவபாலன், மூத்த எழுத்தாளர் கே.எஸ்.சிவஞானராஜா, அரசியல்,பொருளாதார,சமூக, விஞ்ஞான,கலை,இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி-}