யாழில் உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகம் (Video)

614

யாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இம்முறை உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகமாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

போதிய விதை உருளைக் கிழங்கு இன்மையால் இம்முறை யாழ்.குடாநாட்டில் 106 ஹெக்டேயர் நிலப் பரப்பில் மாத்திரமே உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி உடுவில் உருளைக் கிழங்கு சங்கத்திற்குட்பட்ட வலிகாமம் பிரதேசத்தில் குப்பிழான்,ஏழாலை, ஈவினை, புன்னாலைக்கட்டுவன், சுன்னாகம்,இணுவில் ஆகிய பகுதிகளிலும்,யாழ்.மாவட்ட உருளைக்கிழங்குச் சங்கத்திற்குட்பட்ட பகுதிகளான இடைக்காடு,கதிரிப்பாய், அச்சுவேலி, பத்தமேனி, நவக்கிரி,சிறுப்பிட்டி, புத்தூர், நீர்வேலி,கோப்பாய்,அச்செழு, உரும்பிராய், ஊரெழு,வசாவிளான், மானிப்பாய்,சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளிலும் உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வழமை போன்று இவ்வருடமும் உடுவில் உருளைக் கிழங்குச் சங்கத்திற்குட்பட்பட்ட வலிகாமம் பிரதேசத்தில் உருளைக் கிழங்குச் செய்கையில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டியிருந்தனர்.

விதை உருளைக் கிழங்குகள் போதியளவு இறக்குமதி செய்யப்படாமையால் வழமையை விட இவ்வருடம் குறைந்தளவிலான ஹெக்டேயர் நிலப் பரப்பிலேயே உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால்,உருளைக் கிழங்குச் செய்கையாளர்கள் வழமை போன்று எதிர்பார்த்த வருமானத்தை இவ்வருடம் ஈட்ட முடியவில்லை.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி இம்முறை அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டிருந்தது.உள்ளூர் விவசாயிகளின் நலனடிப்படையில் அவர்களுக்குச் சலுகை வழங்கும் வகையில் குறித்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வருடம் உருளைக் கிழங்கு அறுவடை சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னரே வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் உருளைக் கிழங்குச் செய்கையாளர்கள் நன்மையடைந்திருந்தனர்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்வதற்கு வசதியாகப் போதிய விதை உருளைக் கிழங்குகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள யாழ்.குடாநாட்டு உருளைக் கிழங்குச் செய்கையாளர்ர்கள் உரிய சந்தை வாய்ப்புக் கிடைக்க வழி வகை செய்ய வேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}