யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட விகாரி வருடப் பிறப்பு விழா (Video)

161

பிரசித்தி பெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் விகாரி வருடப் பிறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(14) அதிகாலை திருப்பள்ளி எழுச்சியுடன் ஆரம்பமானது.

இன்று அதிகாலை-05 மணியளவில் உஷக்காலப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து அதிகாலை-05.30 காலைச் சந்திப் பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்காதேவி அலங்கார நாயகியாக உள்வீதியில் எழுந்தருளி ஆலய முன்றலை வந்தடைந்தாள்.

அதனைத் தொடர்ந்து ஆலய தீர்த்தக் கேணியில் சித்திரைப் புத்தாண்டையொட்டிய சங்கிராந்தித் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

தொடர்ந்து அம்பாள் ஆலய வெளிவீதியில் வலம் வந்து மீண்டும் தனது இருப்பிடத்தைச் சென்றடைந்தாள்.

நண்பகல்-12.30 மணியளவில் அம்பாளுக்கு 108 கலச அபிஷேகம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பிற்பகல்-02.30 மணியளவில் சித்திரைப் புத்தாண்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இவ்வாலயத்தில் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விசேட பூசை வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டதுடன் இன்று இரவு வரை அயற்கிராமங்கள் மற்றும் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலுமிருந்தும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் புத்தாடைகள் அணிந்து அம்பாள் ஆலயத்திற்கு வருகை தந்து தரிசனம் செய்தமையை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, யாழ்.குடாநாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உட்பட ஏனைய அனைத்து இந்து ஆலயங்களிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பூசை பூசை வழிபாடுகள் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}