யாழ். குப்பிழான் மக்களுக்கு புகழாரம் சூட்டிய வடக்கு முன்னாள் முதலமைச்சர் (Video)

112

ஒரு மனிதனிடம் செல்வம் மிகுந்துவிட்டால் மட்டும் அறப்பணிகளை ஆற்றக் கூடிய தன்மை வந்துவிடாது. இயல்பாகவே பிறப்பிலிருந்தே ஏனையவர்களுக்கு உதவுகின்ற மனோநிலை,தமது மண்ணை நேசிக்கின்ற தன்மை, தமது உடன் பிறப்புக்களையும் வாழ்வில் உயரச்செய்யவேண்டும் என்ற உயரிய சிந்தனைகள் ஆகிய நற்பண்புகள் ஒன்றாக உள்ளத்தில் உதயமாக வேண்டும். அப்போது தான் பிறருக்கு உதவுகின்ற மனப் பக்குவம் இயல்பாகவே வெளிப்படும். குப்பிழான் பிரதேசத்தில் பிறந்த பலரிடம் இவ்வாறான நற்பண்புகள் மிகுதியாக இருந்துள்ளதை நான் பலதடவைகளில் உணர்ந்திருக்கின்றேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ்மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

குப்பிழானிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூர் நாட்டில் 103 வயதில் வாழ்ந்து வரும் மூத்த சமூக சேவையாளர் கந்தையா கிருஷ்ணரின் நிதிப் பங்களிப்புடன் குப்பிழான்- சிங்கப்பூர் நலன்புரி மன்றத்தின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு உதவி வழங்கலும், கெளரவிப்பும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை(13) பிற்பகல் யாழ். குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரம மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குப்பிழான் மண்ணைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட 103 வயது நிரம்பிய கந்தையா கிருஷ்ணனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த அறப்பணி நிகழ்வுகளில் கலந்துகொண்டு உங்கள் அனைவர் முன்னிலையிலும் உரையாற்றக் கிடைத்தமை எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகின்றது.

குப்பிழான் சிவபூமி நிலையத்தைப் பற்றியும், அவர்கள் ஆற்றுகின்ற இறைபக்தியுடன் கூடிய அறப்பணி நிகழ்வுகள் பற்றியும் நான் அறிந்திருக்கின்றேன். இந்த நிலையத்தை ஒருமுறை வந்து பார்வையிட விரும்பிய போதும் பல்வேறு வேலைகளின் அழுத்தம் நிமித்தம் இங்குவர நேரம் கிடைக்கவில்லை.

எதிர்பாராதவிதமாக இந் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பு அண்மையில் கிடைத்த போது மிகவும் மகிழ்வுடன் அதனை ஏற்றுக் கொண்டேன்.

நீண்டகால யுத்தத்தின் விளைவாக சொத்துக்கள்,விவசாயபூமிகள்,வீடு,வளவு போன்றவற்றையும் மற்றும் பல இனிய உறவுகளையும் தொலைத்துவிட்ட நிலையிலும் எம்மக்கள் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் கருணையுள்ளம் படைத்த எம்முட் பலர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்த வண்ணம் எம்மக்களைத் தாங்கிக் கொள்வதற்காக மேற்கொண்டு வருகின்ற இதுபோன்ற அறப்பணிகள்,வாழ்வாதார மேம்பாட்டு நிகழ்வுகளே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

உயர்திரு.கந்தையா கிருஷ்ணன் வளம் கொழிக்கும் சிங்கப்பூர் நாட்டில் அஞ்சல் அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்று 103 வயது நிரம்பிய நிலையிலும் தனது உழைப்பின் ஒரு பகுதியை இவ்வாறான சமூக மேம்பாட்டு நிகழ்வுகளுக்கென ஒதுக்கி இந்நிகழ்வுகளை வருடாந்தம் முன்னெடுத்து வருகின்றார்.

அதுமட்டுமன்றி இங்கு நடைபெறுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக காணொளிக் காட்சிகள் மூலம் பார்த்துக் கொண்டிருக்கின்றாரெனவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

குப்பிழான் சிவபூமி ஆச்சிரமம் அமைந்திருக்கின்ற வீடு,வளவு அனைத்தும் ஸ்ரீஸ்கந்தமூர்த்திக்கு சீதனமாக வழங்கப்பட்ட போதும் திருமதி-ஞானா ஸ்ரீஸ்கந்த மூர்த்தியின் திடீர் மறைவின் பின்னால் அவரின் ஞாபகார்த்தமாகத் தமது சொத்துக்களை சிவபூமி அறக்கட்டளை நிலையத்திற்குக் கையளித்து அவர் பொதுப்பணிக்கு வித்திட்டுள்ளார். முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளரான ஸ்ரீஸ்கந்தமூர்த்தியின் உயர்ந்த நற்பண்புகளை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

இவ் ஆதனம் வைத்திலிங்கம் அதனைத் தொடர்ந்து நல்லையா என வழிவழியாக Malayan Pensioner களுக்கே சொந்தமான ஆதனமாக இருந்தமையால் இதற்கு Pension வளவு எனப் பெயருமுண்டு என அறிகின்றேன்.

இன்றைய நிகழ்வுகள் சிறப்புறவும், கந்தையா கிருஷ்ணன் இன்னும் பலகாலம் தேகாரோக்கியத்துடன் வாழவும் இறையருளை வேண்டி நிற்கின்றேன்.

வெளிநாடுகளில் வசிக்கும் அவர் போன்றவர்கள் தமது தாயக மண்ணைப் பெருமைப்படுத்த, வளம் பெறச் செய்ய அவர் போல் முன்வரவேண்டும்

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}