யாழ். நகரில் மேதினக் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம் விநியோகம் (Photo)

117

யாழ்.நகரில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நோக்கிய புரட்சிகர மே தினம்-2019 எனும் தலைப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும உண்டியல் நிதி சேகரிப்பும் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த துண்டுப் பிரசுரத்தில் உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முகமாக வருடாந்தம் எமது கட்சியால் நடாத்தப்பட்டுவருகின்ற புரட்சிகர மேதின முன்னெடுப்புகளுக்காக நிதிப் பங்களிப்பு நல்குவதுடன் நீங்களும் இணைவீர்! என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளாக அனைத்துத் தொழிலாளர்கள்- ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் வழங்கு! ,அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பாவனைப் பொருட்களின் விலைகளைக் குறை! தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வை வழங்கு!, தேசிய நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தெற்கில் இடம்பெறும் அதிகாரப் போட்டியால் உழைக்கும் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது என்பதை நாம் உணரவேண்டும்!, வடக்குக் கிழக்கில் ஆதிக்க அரசியல் தரப்புக்களின் மக்களை அடகு வைக்கும் ஏமாற்று அரசியலை நிராகரிப்போம்!, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்போம்!, கேப்பாப்புலவு, சிலாவத்துறை உள்ளிட்ட படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களின் நிலங்களையும் மக்களிடம் மீளக் கொடு!, அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!, காணாமலாக்கப்பட்டோருடைய உறவுகளின் போராட்டத்திற்குத் தீர்வு கொடு!, தேசிய சொத்துக்களை அந்நிய பல்தேசியக் கம்பனிகளுக்கு விற்கும் தேசத்துரோகச் செயற்பாட்டை நிறுத்து! சுற்றாடலை நாசமாக்கும் புத்தளத்தில் இடம்பெறும் ஆபத்தான குப்பைத் திட்டத்தைக் கைவிடு!, இலவசக் கல்வியையும், மருத்துவத்தையும் இல்லாமல் செய்யும் தனியார்மயப்படுத்தலை நிறுத்து!, வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புக்களை உருவாக்கு!, உழைக்கும் மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் நுண்கடன் கொள்ளையைத் தடுத்து நிறுத்து!, மண்ணையும் மக்களையும் பாதிக்கும் அதிக இரசாயனங்களைப் பயன்படுத்தும் செயற்கைமுறை விவசாயத்தைக் கட்டுப்படுத்தி, இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கு!, மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா வழங்கு!, கடந்த நாற்பது வருடங்களாக இடம்பெற்ற அடக்குமுறைகளுக்கு துணையாய் இருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்!, அதற்கு மாற்றாக அமுல்படுத்த முயல்கின்ற ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (CTA) மீளப்பெறு! ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ் வருடம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் மே தின ஊர்வலங்களையும், பொதுக்கூட்டங்களையும் யாழ்ப்பாணம் புத்தூரிலும், மலையகத்தில் ராகலையிலும், வன்னியில் வவுனியாவிலும் முன்னெடுக்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{எஸ்.ரவி-}