வடக்கில் படைவிலக்கல் சாத்தியமேயில்லை: பாதுகாப்பு அமைச்சர் பதிலடி!

120

வடக்கில் முழுமையான படைவிலகல் என்பது சாத்தியமில்லையென இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு தற்போது குறிப்பிட்ட இராணுவத் தளங்களை வேறிடத்துக்கு மாற்றவோ, வடக்கிலிருந்து படைகளை விலக்கவோ முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில் வடக்கில் படை விலக்கம் தொடர்பில் அரசியல் ரீதியானதொரு முடிவு எடுக்கப்பட வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஆங்கில வார இதழொன்று இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவிடம் வினாவியது.

இதற்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாட்டுக் காரணங்களால் முப்படைகள் மற்றும் காவல்துறையினரை தமதிடங்களிலிருந்து ஏனைய இடங்களுக்கு செல்லுமாறு கேட்க முடியாது.

இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் தமக்கு அச்சுறுத்தலிருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் உணருவார்களேயானால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு முடிவுக்கு வரும்.

அவ்வாறான நபர்கள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே இந்தப் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார்.