யாழ். குப்பிழானில் மூவரின் உயிர்களைப் பலியெடுத்த இடிமின்னல்: நடந்தது என்ன? (Video)

2838

யாழ்ப்பாணம் குப்பிழானில் இடி மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(16) பிற்பகல்-01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று பிற்பகல் யாழின் பல்வேறிடங்களிலும் இடி மின்னலுடன் கடும் மழைவீழ்ச்சி பதிவாகியது. இந்நிலையில் யாழ்.குப்பிழான் தெற்கு பரிசயப்புலம் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் மூன்று பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். குறித்த தோட்டத்தின் உரிமையாளரான திருநாவுக்கரசு கண்ணன் தனது வீட்டிற்குச் சென்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களுக்கு மதியநேர உணவெடுத்து வந்துள்ளார்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களில் ஒருவர் மதிய உணவு எடுத்து வரச் சென்ற தோட்ட உரிமையாளரைக் காணாமையால் அவரைத் தேடிச் சென்றுள்ளார்.

இதற்கிடையே இடிமின்னல் தாக்கத்துடன் கடும் மழை பெய்தமையால் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இரு பெண்களும், தோட்ட உரிமையாளரும் அருகிலிருந்த சிறு கொட்டிலுக்குள் ஒதுங்கியுள்ளனர். அப்போது தான் குறித்த பகுதியில் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் தோட்டத்திற்கு வருகை தந்த பெண் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் மயக்கம் தெளிந்த குறித்த பெண் அயலிலுள்ள வீட்டாருக்குச் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

இடி மின்னல் தாக்கியது எப்படி?

மேற்படி பகுதியில் வளர்ந்த நிலையில் காணப்படும் தென்னை மரமொன்றின் மீதே இடிமின்னல் முதலில் தாக்கியுள்ளது. இதனால், அந்தத் தென்னைமரத்தின் மேற்பகுதி மற்றும் ஓலைகள் கருகியுள்ளன. குறித்த இடி மின்னலின் தாக்கம் அருகிலிருந்த சிறிய தென்னை மரத்திலும் உணரப்பட்டுள்ளது.

இந்தத் தென்னை மரத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறுகொட்டில் தாங்கி நிற்கும் வகையில் பலகையூடாக ஆணி அடித்துக் கம்பி சுற்றப்பட்டிருந்தது. குறித்த ஆணியே இடி மின்னல் தாக்கத்தைச் சிறிய தென்னை மீது கடத்துவதற்கு காரணமாகும்.

இடிமின்னல் தாக்கத்தால் சிறிய தென்னைமரத்தின் கீழ்ப்பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் கொட்டிலில் காணப்பட்ட கதிரையும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

பெருமளவு மக்கள் படையெடுப்பு

இந்தச் சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் மாத்திரமன்றி யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான் மக்கள் சம்பவம் இடம்பெற்ற பகுதியைப் பார்வையிட்டு வருகின்றனர்.

மேற்படி சம்பவத்தில் பலியான மூவரில் தோட்ட உரிமையாளரான திருநாவுக்கரசு கண்ணன்(வயது-48),திருமதி-மைனாவதி கந்தசாமி(வயது-52) ஆகிய இருவரும் சகோதரர்களாவர். இவர்களில் திருநாவுக்கரசு கண்ணன் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதுடன் திருமதி -மைனாவதி கந்தசாமி ஆறு பிள்ளைகளின் தாயாவார்.

அத்துடன் திருமதி- சுதா திருநாவுக்கரசு(வயது-38) என்ற இளம் குடும்பப் பெண்மணியும் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மேற்படி மூவரும் ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியில் அருகருகே வசிப்பிடத்தைக் கொண்டுள்ள நிலையில் மூவரதும் திடீர் இழப்பு குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{நேரடி ரிப்போர்ட் மற்றும் காணொளி:- யாழ்.குப்பிழானிலிருந்து செ.ரவிசாந்-}