யாழ். குப்பிழானில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு!

300

யாழ்.குப்பிழான் தெற்குப் பகுதியில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படுமென இடர் முகாமைத்துவ அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இடி மின்னல் தாக்கத்தினால் தோட்டத்தில் வேலை செய்த பின்னர் இளைப்பாறிக் கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட மூவர் நேற்றைய தினம் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(16)பிற்பகல்-01.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள நிலையில் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவிகளின் இழப்புக்கள் மூன்று குடும்பத்தவர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையிலேயே மேற்படி இழப்பீடு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை,வடக்கின் இடைநிலைப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளமையால் எதிர்வரும் நாட்களில் பிற்பகல் வேளைகளில் தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக திருநெல்வேலி வானிலை நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது மின்னலின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுமெனவும் மேற்படி நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

{எஸ்.ரவி-}