யாழ். குப்பிழானில் இடி மின்னலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம்: முன்வந்துள்ள பிரமுகர்! (Photos)

387

யாழ்.குப்பிழான் தெற்குப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(16) இடிமின்னல் தாக்கி உயிரிழந்த ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தவர்களின் வீடுகளுக்கு தியாகி அறக்கொடை நிறுவனத்தின்(T.C.T)தலைவர் வாமதேவ தியாகேந்திரன் இன்று மதியம் விஜயமொன்றை மேற்கொண்டார்.

உயிரிழந்த மூவர்களினதும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அவர் அவர்களினது குடும்ப சூழ்நிலைகளையும் அவர்களது உறவினர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

தாயை இழந்து தவிக்கும் குடும்பத்தின் பிள்ளையொருவருக்கு T.C.T நிறுவனத்தில் உடனடியாக மாதாந்தம். 30 ஆயிரம் ருபா சம்பளத்தில் வேலை வாய்ப்பு. வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.

மேலும் குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவிகளின் உயிரிழப்புக்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அனைத்துப் பிள்ளைகளினதும் கற்றல்- கற்பித்தல் செலவுகளையும் தியாகி அறக்கொடை நிறுவனம் நூறுவீதம் பொறுப்பெடுக்குமென்ற உத்தரவாதத்தையும் வழங்கினார்.

இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தால் வழங்கப்படும் வீட்டுத் திட்டம் இதுவரை ஒரு குடும்பத்திற்குக் கிடைக்கவில்லை எனச் சுட்டிக் காட்டப்பட்டது. இதனைக் கவனத்திலெடுத்த தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் வீட்டுத் திட்டத்தை அரசு வழங்காவிடில் இதற்கான முழுப் பொறுப்பையும் தமது நிறுவனம் ஏற்றுக் கொள்ளுமெனவும் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, தமிழ் அரசியல் வாதிகள் சமூகப் பொறுப்புணர்ந்து உடனடியாக மேற்படி அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்க முன்வராமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் சமூகசேவகரும், பிரமுகருமான வாமதேவ தியாகேந்திரன் உடனடியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ முன்வந்திருப்பது மேற்படி பகுதி மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

{எஸ்.ரவி-}