யாழ். தெல்லிப்பழையில் உதயமானது Dr.ரகுபதி ஞாபகார்த்த அவசர சிகிச்சைப் பிரிவு (Video)

862

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அளப்பெரும் மருத்துவ சேவைகளாற்றி அண்மையில் அமரத்துவமடைந்த யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த பொதுவைத்திய நிபுணர் அமரர்- அம்பலவாணர் ரகுபதி ஞாபகார்த்தமாக மேற்படி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(19)காலை-08.30 மணி முதல் நடைபெற்றது.

இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வைத்தியர்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ‘அபயம்’ சமூக சேவைக்கான அமைப்பு சுமார்-40 இலட்சம் ரூபா செலவில் இந்தச் சிகிச்சை நிலையத்தைப் புனரமைத்து டாக்டர்.ஏ.ரகுபதி ஞாபகார்த்த அவசர சிகிச்சைப் பிரிவு எனும் பெயரில் மாற்றியமைத்துள்ளதுடன் மேற்படி பிரிவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளது.

பொதுவைத்திய நிபுணர் அமரர்-அம்பலவாணர் ரகுபதியின் பாரியார் வதனி ரகுபதி மற்றும் அபயம் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர்களில் ஒருவரும்,அவுஸ்திரேலியாவில் புற்றுநோய்ச் சிகிச்சை நிபுணராக கடமையாற்றி வருபவருமான யசோதா சண்முகராஜா ஆகியோர் இணைந்து புனரமைக்கப்பட்ட மேற்படி அவசர சிகிச்சைப் பிரிவைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி யோ.திவாகர் தலைமையில் பொதுவைத்திய நிபுணர் அமரர்- அம்பலவாணர் ரகுபதி ஞாபகார்த்த உரைகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி கிருஷ்ணன் சிவராமன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி நளாயினி ஜெகதீசன், சுகாதார அமைச்சின் ஆலோசகர் வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இ. தேவநேசன், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி முத்துக்குமாரசாமி உமாசங்கர் மற்றும் அபயம் அமைப்பின் உறுப்பினர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்தியநிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள், பொதுவைத்திய நிபுணர் அமரர்-அம்பலவாணர் ரகுபதியின் உறவினர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியில் அதீத கரிசனை கொண்டிருந்த வைத்திய நிபுணர் ரகுபதி தான் அமரத்துவமடைவதற்கு முன்னதாகவே தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவைப் புனரமைப்புச் செய்வது தொடர்பாகவும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாகவும் அபயம் அமைப்பினரிடம் வேண்டுகோள் முன்வைத்திருந்தார்.

அவரது வேண்டுகோளைப் பூர்த்தி செய்யும் பொருட்டே’அபயம்’ அமைப்பு அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்து வழங்கியுள்ளதுடன் குறித்த பிரிவினை நவீன வசதிகளுடன் கூடியதாகப் புனரமைத்து வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}
{படங்கள்:-நிர்மலன் (மல்லாகம்)}