வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை ஆரம்பம் (Videos)

508

யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது. இலங்கையில் அமைதி,சாந்தி,சமாதானம்,நல்லிணக்கம் நிலவ வேண்டி இந்தத் தரிசன யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.

காலை-08 மணி முதல் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பஜனை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தரிசன யாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள் சைவத்தின் அடையாள சின்னமான நந்திக் கொடிகளைத் தமது கைகளில் ஏந்தியவாறும் ,தெய்வீக பஜனைப் பாடல்கள் பாடியவாறும் நல்லூர்க் கந்தசுவாமி தேரடியை வலம் வந்து முருகப் பெருமானைத் தரிசித்தனர்.

தொடர்ந்து காலை-08.45 மணியளவில் ஆலய முன்றலில் இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஆணையாளர் வை. மோகனதாஸ் தலைமையில் தரிசன யாத்திரை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இந்தத் தரிசன யாத்திரையில் யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் நிலையத் தலைவர் சுவாமி சிதாகாசானாந்த சுவாமிகள் கலந்து கொண்டு தரிசன யாத்திரையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆரம்ப உரைகளும் இடம்பெற்றன.

தரிசன யாத்திரை ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி ஸ்ரீவிமலதேரர் மற்றும் யாழ்.மாவட்ட இராணுவ உயரதிகாரியொருவரும் கலந்து கொண்டார்.

நல்லூரில் ஆரம்பமான தரிசன யாத்திரையில் யாழ்ப்பாணம், வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேற்படி தரிசன யாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள் செல்லும் வழியில் பஜனை வழிபாடுகளுடன் பல்வேறு ஆலயங்களையும் தரிசித்த பின்னர் சிவனொளிபாதமலையின் அடிவாரத்தைச் சென்றடைவர். அங்கிருந்து அடியவர்கள் கால்நடையாக சிவனொளிபாத மலையின் உச்சியைச் சென்று தரிசனம் செய்வரென தரிசன யாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளிகள்:- எஸ்.ரவி-}