யாழ். பனம் தும்பு உற்பத்திக்கு உலகளவில் அதிக கேள்விகள்!!: பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் காட்டம் (Video)

354

யாழ்.குடாநாட்டுப் பனையிலிருந்து கிடைக்கும் பனம் தும்பு உற்பத்திக்கு உலகத்திலேயே நிறையக் கேள்விகள் காணப்படுகின்றன. தொன் கணக்காகத் தமக்குப் பனம் தும்பைத் தருமாறு கேட்கிறார்கள். இதன் மூலம் நாம் அதிக வருவாயை ஈட்ட முடியுமெனப் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ஆ.ந.இராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்றுச் சனிக்கிழமை(04) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்திப் பெரு முயற்சிகளை மேற்கொண்ட போதும் சிறிய தொகையினரே பனம் தும்பு உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். இதனால், சிறியளவு பனம் தும்புகளேயே எம்மால் உற்பத்தி செய்ய முடிகிறது. ஆகவே, பனம் தும்பு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு எமது இளைஞர்கள், மக்கள் முன்வர வேண்டும்.

இதனையொரு தொழிலாக மாத்திரமன்றி பொழுதுபோக்காகவும் மேற்கொள்ளலாம். இதற்கான இயந்திர உபகரணங்களை எங்களுடைய பனை அபிவிருத்திச் சபை வழங்குவதற்குத் தயாராகவிருக்கிறது.

நீங்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த உபகரணத்திலிருந்து தும்புகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.பனம் தும்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவும் நாம் தயாராகவிருக்கிறோம்.

எனவே, பனம் தும்பு உற்பத்தியில் ஈடுபடுவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமெனவும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

{எஸ்.ரவி-}