யாழ். உடுவிலில் சிரட்டையில் தயாரான கைவினைப் பொருட்கள்: ஆண்களும் பங்கேற்பு (Video)

539

வடமாகாணத் தொழிற்துறைத் திணைக்களமும், போருட் ஸ்ரீ அம்பாள் மாதர் சேமிப்புக் கடன் வழங்கு சங்கமும் இணைந்து தேங்காய் ஓட்டை மூலப் பொருளாகக் கொண்ட கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சி நெறியை யாழ். உடுவில் கலாசார மண்டபத்தில் தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளன.

உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் தேங்காய் ஓட்டை மாத்திரம் மூலப் பொருளாகக் கொண்ட கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சி நெறி முதன்முதலாக நடாத்தப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த மாதம்-29 ஆம் திகதி ஆரம்பமான மேற்படி பயிற்சிநெறி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(10)வரை நடைபெற்றது. இந்தப் பயிற்சிநெறியில் 15 பெண்களுடன் ஐந்து ஆண்களும் ஆர்வத்துடன் இணைந்து பயிற்சி பெற்றுக் கொண்டனர்.

இந்தப் பயிற்சிநெறியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பப் பெண்கள் மற்றும் யுவதிகளுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவனொருவரும், இளைஞர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

தேங்காய் ஓட்டை மாத்திரம் மூலப் பொருட்களாக கொண்டு பயிற்சியாளர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு பொருட்கள் கடந்த பத்துநாட் பயிற்சி நெறி நாட்களிலும் பயிற்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.இவற்றுள் பல பொருட்கள் அழகியல் சார்ந்தவையாகவும்,குழந்தைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களாகவும் பலரையும் கவரக் கூடிய வகையில் அமைந்துள்ளன.

மேற்படி பயிற்சி நெறியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(10) முற்பகல்- 11.30 மணி முதல் உடுவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

போருட் ஸ்ரீ அம்பாள் மாதர் சேமிப்புக் கடன் வழங்கு சங்கத்தின் முகாமையாளர் ரட்ணம் சிவநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உடுவில் பிரதேச செயலாளர் இ. ஜெயகாந்த் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இதன்போது சிறப்புரைகளும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து பயிற்சியாளர்களின் கைவண்ணத்தில் உருவான கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.

இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தபட்டிருந்த கைவினைப் பொருட்களில் இளம் குடும்பஸ்தரொருவரால் சிரட்டை ஓடுகளை மாத்திரம் மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி மற்றும் மாட்டுவண்டில் உள்ளிட்ட பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

மேற்படி பொருட்களுக்கு உரிய சந்தைவாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான உற்பத்தியில் நாட்டம் செலுத்துவதற்குத் தாம் ஆவலாகவுள்ளதாக மேற்படி பயிற்சிநெறியில் கலந்து கொண்டவர்கள் எமது செய்திச் சேவைக்கு விசேடமாக கருத்துத் தெரிவித்தனர்.

இந்தப் பயிற்சி நெறி எதிர்வரும் காலங்களில் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்பட்ட ஏனைய இடங்களிலும் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக போருட் ஸ்ரீ அம்பாள் மாதர் சேமிப்புக் கடன் வழங்கு சங்க முகாமையாளர் தெரிவித்தார்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:-யாழ்.உடுவிலிலிலிருந்து செ. ரவிசாந்-}