இலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது: சொல்கிறார் யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர்!! (Video)

335

தமிழீழம் எங்களுக்கு விருப்பமாகவிருந்தாலும் இலங்கையில் நாங்கள் இதுதொடர்பாக கனவு காணக் கூடாது. இலங்கையை நாம் அனைவருக்கும் உரிய நாடாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தெரிவித்துள்ளார்.

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “மத அடிப்படை வாதங்களும் மானுடத்தின் சிதைவும்” எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் பெளர்ணமி தினமான நேற்று முன்தினம் சனிக்கிழமை(18) பிற்பகல் யாழ்.கொக்குவில் சந்தியிலுள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரலாற்று ரீதியாகத் தமிழ் அரசு காணப்பட்டாலும் நவீன முறையில் நாங்கள் ஏனைய இனத்தவர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே இதுதொடர்பான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை நோக்கி நாங்கள் பயணிப்போம். இதற்குமப்பால் நாங்கள் எந்தவொரு அடிப்படைவாதத்திற்கும் நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது. சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டமும் இதனைத் தான் வலியுறுத்த வேண்டும்.

தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டு சிங்களப் பயங்கரவாதத்தை எதிர்த்த நாம் தமிழ்ப் பயங்கரவாதத்தை நோக்கிச் சென்றோம். இதுவுமொரு அடிப்படை வாதம் தான்.

நாங்கள் ஆயுதம் தூக்கியதில் நியாயப்பாடிருந்தது.ஆனால்,தூக்கிய ஆயுதத்தை எங்களுக்குள்ளேயே நான்கு பக்கமும் திருப்பினோம்.இந்த அடிப்படை வாதத்திலிருந்து நாங்கள் எங்களை விடுவிக்க வேண்டியிருந்தது. ஓரளவு எங்களை நாங்கள் விடுவித்துக் கொண்டாலும் இன்னும் அது ஓடிக் கொண்டு தானிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க முஸ்லிம்களும், நாங்களும் ஆனந்தமாய் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தோம். அதுமட்டுமன்றி கிழக்குப் பகுதியிலும் நெருக்கமுடன் வாழ்ந்து வந்த தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் அரேபிய மயமாக்கம் எனும் படு மோசமான அடிப்படை வாதத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. பணமே இதற்கு காரணமாகும்.

இதன்மூலம் தற்போது கிழக்கில் பல்வேறு கிராமங்கள் அரேபிய நகரங்களாக மாறிவிட்டது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

[செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி-]