ஒரே பார்வையில் யாழ். செய்திகள்….

240

“நேற்றைய நிகழ்வுகள் இன்றைய வரலாறு…இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறு…” எனும் வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு ‘Jaffna Vision’ இணையத்தளம் எமது வாசகர்களுக்காக ஒரே பார்வையில் யாழ். செய்திகள் எனும் புதிய முயற்சியை உங்கள் கண் முன் கொண்டு வருகிறது.

எமது தளத்தைப் பார்வையிட வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்காக அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணத்தைத் தளமாக கொண்டியங்கும் எமது நிறுவனம் அன்பான வாசகர்களின் நன்மை கருதி இந்தப் புதிய முயற்சியை ஆரம்பிக்கின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் எமது தளத்தில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடத் தவறிய யாழ்.செய்திகள் சுருக்கமாக இதோ உங்கள் பார்வைக்காக…

யாழில் கடலுக்குள் பாய்ந்தது கார்: ஒருவருக்கு ஏற்பட்ட சோகம்!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் யாழ்.மண்டைதீவு சந்திக்கு அண்மையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(19)பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

யாழ்.மண்கும்பான் சாட்டிக் கடற்கரைக்கு மூவரும் சென்றுவிட்டு மீண்டும் திரும்பும் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றது.

மேற்படி விபத்துச் சம்பவத்தில் யாழ்.கொக்குவிலைச் சேர்ந்த முருகையா முகுந்தராஜா(வயது-34) என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

இதேவேளை, காரைச் செலுத்தி வந்த சாரதி மதுபோதையிலிருந்ததாகத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.கோண்டாவிலில் ரயில் மோதி குடும்பத்தலைவர் பலி

யாழ்.கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ரயிலில் மோதுண்டு சுன்னாகத்தைச் சேர்ந்த 49 வயதான குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(19) இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்படி குடும்பஸ்தர் மதுபோதையிலேயே ரயில் மோதுண்டுள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடமாகாணப் பொதுமக்களிடம் ஓர் விசேட வேண்டுகோள்!!

இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த மாதம்- 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் ஒரு மாத நிறைவை முன்னிட்டு வடமாகாண ஆளுனர் கலாநிதி- சுரேன் ராகவன் விசேட வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

இதன்படி,நாளை செவ்வாய்க்கிழமை(21) காலை- 08.45 மணியளவில் வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துச் சமய வழிபட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்கச் செய்வதுடன், வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பொதுமக்களும் இணைந்து ஒரு நிமிட மெளன அஞ்சலியை செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்.மாநகரசபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்

யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலைக்கு முன்பாக செல்லும் சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி வீதி திங்கட்கிழமை(20) முதல் ஒரு வழிப்பாதையாக செயற்படுமென யாழ்.மாநகரசபை தெரிவித்துள்ளது.

யாழ்.அளவெட்டியில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் வைபவம்

யாழ்.அளவெட்டி ஞானவைரவர் விளையாட்டுக் கழக திறந்தவெளி அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(19)காலை சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.

குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயபரிபாலன சபை பொதுக் கூட்டம்

யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயபரிபாலன சபையின் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகசபைத் தெரிவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை(19) பிற்பகல்-05 மணி முதல் மேற்படி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த வாள் மாத்திரம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை?

நாட்டு சூழ்நிலைகள் காரணமாகத் தற்போது இலங்கையில் வாள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. வாள்கள் அனைத்தையும் பொலிஸில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையின் தேசியக் கொடியில் காணப்படும் வாள் மாத்திரம் இன்னமும் நீக்கப்படவில்லை என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன் கடும் ஆதங்கம் வெளியிட்டார்.

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “மத அடிப்படை வாதங்களும் மானுடத்தின் சிதைவும்” எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் பெளர்ணமி தினமான நேற்று முன்தினம் சனிக்கிழமை(18) பிற்பகல் யாழ்.கொக்குவில் சந்தியிலுள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் ஒரு நாள் கூடிப் பூ வைத்து விளக்கேற்றிப் போதல் மட்டும் போதுமா?

மக்கள் ஒற்றுமையாக ஒரு தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்டு அதனை நேசித்து தமிழினம் வரலாறாய் நிமிர்ந்து நிற்க அவர்கள் இரத்தம் சிந்திய புண்ணிய பூமி முள்ளிவாய்க்கால் .முள்ளிவாய்க்கால் மண்ணில் கால் பதித்து மனம் வெதும்பி கண்ணீர் விட்டழுது விளக்கேற்றி வந்து விட்டோம். அடுத்தது என்ன? 2020 மே 18 வரை மறப்போம் மன்னிப்போம் என்ற தத்துவமா? ஒரு நாள் கூடிப் பூ வைத்து விளக்கேற்றிப் போதல் மட்டும் போதுமா? எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கடும் ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார்.

{செய்தி ஆசிரியர்:- செ.ரவிசாந்-}