ஒரே பார்வையில் யாழ். செய்திகள்…

238

“நேற்றைய நிகழ்வுகள் இன்றைய வரலாறு…இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறு…” எனும் வரலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு ‘Jaffna Vision’ இணையத்தளம் எமது வாசகர்களுக்காக ஒரே பார்வையில் யாழ். செய்திகள் எனும் புதிய முயற்சியை உங்கள் கண் முன் கொண்டு வருகிறது.

இதற்கமைய நேற்றைய தினம்(20/05/2019) எமது தளத்தில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடத் தவறிய யாழ்.செய்திகள் சுருக்கமாக இதோ உங்கள் பார்வைக்காக…

வடக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கி வைப்பு

வடக்கு மாகாணப் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளும் வகையில் 81 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு நேற்று(20) பிற்பகல் வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 52 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கும் , 15 கணித விஞ்ஞானப் பட்டதாரிகளுக்கும், ஒன்பது விவசாயப் போதனாசிரியர்களுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யாழ்.தனியார் வைத்தியசாலையில் சிறுவனிற்கு ஏற்பட்ட துயரம்!

யாழ்.திருநெல்வேலியிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் இருதய சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட மறுநாளே ஒன்பது வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருதயத்தில் துவாரமுடைய கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த சனிக்கிழமை மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனுக்கு இருதய சத்திய சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம்(19) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளான்.

இதேவேளை, மேற்படி சிறுவனின் உயிரிழப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

யாழ்.வடமராட்சியில் கடற்தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட சோகம்!

கடற்தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் நேற்று(20) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழ்.வடமராட்சி கட்டைக்காடு முள்ளியானைச் சேர்ந்த கமலதாஸ் அமலதாஸ்(வயது-38) எனும் ஒரு பிள்ளையின் தந்தையாரே உயிரிழந்தவராவார்.

குறித்த மீனவர் கடலில் மீன்பிடித்துவிட்டுக் கரையை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது.

வீட்டிலிருந்த குடும்பத் தலைவர் திடீர் உயிரிழப்பு!

வீட்டிலிருந்த குடும்பத் தலைவர் திடீரென மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி தனங்கிளப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுரேந்திரன்(வயது-45) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

யாழிற்கு முதற்கட்டமாக அழைத்துவரப்பட்ட முஸ்லிம் அகதிகள்!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளில் ஒரு பகுதியினர் ஏற்கனவே வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது முதல் கட்டமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 13 அகதிகள் யாழ். குடாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளைத் தொடர்ந்து குறித்த அகதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள சிலரின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை மன்னிக்கவே முடியாது!!

எங்களுடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே பயங்கரமான பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டத்திற்கு இணங்கியுள்ளனர். இந்த விடயத்தில் எங்களுடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தமிழர்களாகிய நாம் மன்னிக்கவே முடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடத் துறைத் தலைவரும், சிரேஷ்ட பேராசிரியருமான பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “மத அடிப்படைவாதங்களும் மானுடத்தின் சிதைவும்” எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் பெளர்ணமி தினமான சனிக்கிழமை(18) பிற்பகல் யாழ்.கொக்குவில் சந்தியிலுள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழீழக் கனவு காணவே கூடாது!!

தமிழீழம் எங்களுக்கு விருப்பமாகவிருந்தாலும் இலங்கையில் நாங்கள் இதுதொடர்பாக கனவு காணக் கூடாது. இலங்கையை நாம் அனைவருக்கும் உரிய நாடாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் தெரிவித்துள்ளார்.

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “மத அடிப்படை வாதங்களும் மானுடத்தின் சிதைவும்” எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் பெளர்ணமி தினமான சனிக்கிழமை(18) பிற்பகல் யாழ்.கொக்குவில் சந்தியிலுள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வலி.மேற்குப் பிரதேச சபைக்கு புதிய செயலாளர்

யாழ்/வலி.மேற்குப் பிரதேச சபையின் புதிய செயலாளராக கிருஷ்ணானந்தன் விஜயேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை காலமும் வலி.மேற்குப் பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றி வந்த ப.விமலதாஸ் கட்டடங்கள் திணைக்களத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

[செய்தி ஆசிரியர்:- எஸ். ரவி-]