ஜனாதிபதியின் செயற்பாடுகளில் கடும் சந்தேகம் வெளியிட்ட யாழின் மூத்த சட்டத்தரணி (Video)

221

கடந்த-13 ஆம் திகதி இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சீனாவுக்குப் பயணமானார். ஏற்கனவே கடந்த மாதம்- 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட போதும் ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்தார். எனவே, இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்ட நடவடிக்கையா? என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த சட்டத்தரணியும், சமூக செயற்பாட்டாளருமான சோ.தேவராஜா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “மத அடிப்படை வாதங்களும் மானுடத்தின் சிதைவும்” எனும் தலைப்பிலான விசேட கலந்துரையாடல் பெளர்ணமி தினமான கடந்த சனிக்கிழமை(18)பிற்பகல் யாழ்.கொக்குவில் சந்தியிலுள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு கொண்டாட முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கான நோன்பு அனுஷ்டிக்க கொண்டாட முடியவில்லை. ஆனால், வெசாக் மாத்திரம் வெற்றிகரமாக கொண்டாடலாம்…!

இதுபோன்ற கொடிய சம்பவங்களால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களும், சிற்றுண்டிச்சாலை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளது போன்ற சம்பவங்கள் தொடரக் கூடிய போக்கு காணப்படுகின்றது.

தமிழர்களான நாங்கள் இந்தநாட்டில் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறோம். ஒடுக்கப்பட்ட எங்களுக்குத் தான் தற்போது ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சிறுபான்மைத் தேசிய இனமான முஸ்லிம்களின் வலி தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

[செய்தித்தொகுப்பு மற்றும் காணொளி:- எஸ்.ரவி]