மெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது!

உலகளவில் அதிக எண்ணிக்கையிலான திரைப் பாடல்களைப் பாடியவர் எனும் கின்னஸ் சாதனை படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் சினிமா இரசிகர்களை தனது மெல்லிய குரலால் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் கட்டிப் போட்டு வைத்துள்ளார்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் எந்த மொழியில் பாடல் கொடுத்தாலும் அந்த மொழிக்கேற்ற இயல்பான உச்சரிப்புடன் பாடுவதே இவரது சிறப்பு.

பாடகர் மட்டுமல்லாது நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறைமைகள் கொண்டவர். 1946 ஆம் ஆண்டு யூன் மாதம்-04 ஆம் திகதி மெட்ராஸ் மாகாணத்தில்(தற்போது ஆந்திரப் பிரதேசம்) எஸ்.பி. சம்பமூர்த்தி- சகுந்தலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்.

எஸ்.பி.பி சாவித்திரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்குகிறார்.

எஸ்.பி.பியின் திரைப்பயணத்தின் முதல் பாடலிலே இரசிகர்களின் காதுக்கு தேன் பாய்ச்சினார் `அடிமைப் பெண்’ படப் பாடலான `ஆயிரம் நிலவே வா’! எனும் அந்தப் பாடலை இன்றும் மறக்க இயலாது. தன்னுடைய மெல்லிய குரலுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்துத் தென்னிந்திய சினிமா இரசிகர்களையும் மதிமயங்கச் செய்திடுவார்.

இசைஞானி இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் ஒரே நேரத்தில் தங்களுக்கான பயணத்தை தொடங்கியவர்கள். இருவரும் மேதைகள். இவற்றையெல்லாம் தாண்டி இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இளையராஜாவை ‘வாடா போடா…’ என்று பொதுவெளிகளில் கூட வெளிப்படையாக அழைப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர் பாரதிராஜா. மற்றொருவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அந்தளவிற்கு இருவருக்கும் நெருங்கிய பாசப் பிணைப்பு உண்டு.

தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளர் விஸ்வநாதன் இசையில் பாட ஆரம்பித்த எஸ்.பி.பி நேற்று இசையமைக்க வந்த ஜி.வி.பிரகாஷ் வரை அனைவரின் இசையிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

இளையராஜா, தேவா,வித்யாசாகர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜா என்று கிட்டத்தட்ட அணைத்து இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடிய ஒரே ஒரு பாடகர் எஸ்.பி.பி யாக மட்டும் தானிருக்க முடியும்.

நான்கு மொழிகளில் தேசிய விருதினை வென்றுள்ள எஸ். பி .பி தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை சுமார் 40000 மேற்பட்ட பாடல்களை பாடி உலக சாதனையைப் படைத்துள்ளார்.

நதி எங்கே போகிறது? எனும் நெடுந்தொடரில் தொடங்கி தற்போது ஏர்டெல் சூப்பர் சிங்கர் வரை சின்னத் திரையில் நடிப்பு மற்றும் நடுவர் எனப் பல்வேறு துறைகளிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.