யாழ். உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெகுவிமரிசை (Video, Photos)

324

சைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் கடந்த புதன்கிழமை(12-06-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்வாலய மஹாகும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க கிரியைகள் கடந்த-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை ஆரம்பமாகியிருந்தது. இந்நிலையில் கடந்த-10 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணி முதல் மறுநாள் செவ்வாய்க்கிழமை(11)நண்பகல்-12 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க் காப்பும் வைபவம் நடைபெற்றது.

மஹா கும்பாபிஷேக நன்னாளான புதன்கிழமை(12) மங்கள வாத்தியங்கள் முழங்க, அடியவர்கள் புடைசூழ, நாட்டியாஞ்சலி சமர்ப்பணத்துடன் பிரதான கும்பம் உள்ளிட்ட கும்பங்கள் சிவாச்சாரியார்களால் வீதியுலா எடுத்து வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகாராக் கோஷத்திற்கு மத்தியில் முற்பகல்-10.54 மணி முதல் 11.42 மணி வரையுள்ள சுபவேளையில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.

இவ்வாலய மஹா கும்பாபிஷேக கிரியைகள் உடுப்பிட்டி வீரபத்திரர் ஆலயப் பிரதமகுரு கிரியா அலங்கார வாருதி பிரம்மஸ்ரீ கனக கேதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

இவ்வாலய மஹாகும்பாபிஷேகத்தில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கந்தர்மடம் வேதாந்த மட எட்டாவது குருபீடாதிபதி ஸ்ரீவேத வித்யாசாகரர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கலந்து கொண்டு அருளுரை நிகழ்த்தினார்கள்.

இவ்வாலய மஹா கும்பாபிஷேகத்தில் கிராமத்தைச் சேர்ந்த அடியவர்களுடன் புலம்பெயர் தேசங்களிலிருந்து வருகை தந்த அடியவர்களும் எனப் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.

{செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்-}