யாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம் (Video)

319

சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத் திருவிழாவில் எதிர்வரும்-29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்-05 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு -07.30 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 01 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள் செவ்வாய்க்கிழமை நண்பகல்-12 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.

இவ்வாலய விசேட உற்சவங்கள் தவிர்ந்த ஏனைய திருவிழாக்கள் தினசரி காலை-08.30 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல்-11.15 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று பிற்பகல்- 12.30 மணியளவில் சுவாமி உலாவருதலுடன் நிறைவு பெறும். மாலை உற்சவம் மாலை-05.30 மணியளவில் பூசையுடன் ஆரம்பமாகும்.

இவ்வாலய மஹோற்சவ காலங்களில் தினமும் அடியவர்களுக்கு மகேஸ்வர பூஜை(அன்னதானம்) வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலயச் சுழல விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்-}