வடக்கு எழுத்தாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை!

எங்களுடைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், கெளரவிக்கவும் வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்திலும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தெரிவித்தார்.

வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கலைச்செல்வி கதைகள், ஆடலிறை ஆக்கங்கள், முருகேச பண்டிதம் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் யாழ். மருதனார்மடம் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் பழந்தமிழ் நூல்களை நாங்கள் மறுபதிப்புச் செய்து வெளியிடுவதுடன் அச்சேற்றாத நிலையில் காணப்படும் நூல்களை வெளியீடு செய்வதற்கும் முடிவெடுத்துள்ளோம்.

எங்களுடைய எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை வெளியீடு செய்ய முடியாத நிலையிலிருந்தால் அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் பிரதேச செயலகங்களுக்கு நிதிகளை ஒதுக்கி வழங்கி வருகிறோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

{எஸ்.ரவி-}