60 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கி அதிரடி காட்டிய டிக் டாக்

உலகம் முழுவதும் வேகமாக இளையோரிடையே பரவிவரும் டிக் டாக் செயலிக்கு பல நாடுகளில் எதிர்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்தியாவில், ஆபாசமாகவும் சட்டத்துக்குப் புறம்பாகவும் பதிவிடப்பட்டிருந்த 60 லட்சம் வீடியோக்களை டிக் டாக் செயலி நீக்கியுள்ளது.

இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் மத்தியிலும் டிக் டாக் செயலி பிரபலமாகியுள்ளது. இது தங்களுடைய நடிப்புத் திறமைகளை வெளிக்காட்டுவதற்கும், சமூக பிரச்சினைகளை பகிரவும் பயன்பட்டு வருகிறது.

அதே சமயத்தில், ஆபாசமாகவும், ஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தினர் திட்டியும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இதனால் பல உயிரிழப்புகளும் பறிபோவது தொடர்கதையாகிவிட்டது.


இந்நிலையில், டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகள் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுட்டு வருவதாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான ஸ்வதேஷி ஜக்ரண் மஞ்ச், பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளித்துள்ளனர். அதனையடுத்து, டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகள் தேசவிரோத பதிவுகளை இடும் மையமாக மாறிவிட்டது என்ற புகாருக்கு பதிலளிக்குமாறு, அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து டிக் டாக் நிறுவனத்தின் இயக்குநர் சச்சின் ஷர்மா ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விற்கு அளித்த பேட்டியில், “பயனாளர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிக்கொண்டு வருவதுதான் டிக் டாக் செயலியின் நோக்கம். வன்முறையை தூண்டும் செயல்களுக்கு டிக் டாக் ஊக்கமளிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பாகவும், ஆபாசமாகவும் பதிவிடப்பட்டிருந்த 60 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் டாக் செயலி நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.