சுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)

329

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், உடுவில், மானிப்பாய்த் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளருமான அமரர் வி. தர்மலிங்கத்தின் ஜனன நூற்றாண்டையொட்டி பெரும் உருவச் சிலை ஸ்கந்தவராரோதயா கல்லூரி முன்றலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(02) முற்பகல்-08 மணி முதல் கல்லூரி முன்றலில் அதிபர் மு.செல்வஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த உருவச் சிலையை சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட செஞ்சொற்செல்வர் கலாநிதி- ஆறு. திருமுருகன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, அமரர் வி. தர்மலிங்கத்தின் புத்திரனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், உடுவில் பிரதேச செயலர் சிவராஜசிங்கம் ஜெயகாந்த், வலி. தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் க. தர்ஷன், தர்மலிங்கம் நினைவுச் சபைத் தலைவரும், முன்னாள் வலி. தெற்குப் பிரதேச சபை உறுப்பினருமான எஸ். கெளரிகாந்தன் உள்ளிட்டோர் அமரர் வி. தர்மலிங்கத்தின் உருவச் சிலைக்கு மலர்மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்தும் இடம்பெற்ற நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதேவேளை, இந்த நிகழ்வில் மேற்படி பிரமுகர்களுடன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், இ. ஜெயசேகரன், முன்னாள் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, வலி. வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதி எஸ். தனபாலன், மூத்த ஓதுவார் கலாபூசணம் க. ந. பாலசுப்பிரமணியம், யாழ். மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியலாளர்கள், ஆர்வலர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

{செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- எஸ்.ரவி-}