பெண்ணின் வயிற்றிலிருந்து பாரிய கட்டி மீட்பு!- சாதித்த மருத்துவர்கள்

231

பெண்ணின் வயிற்றிலிருந்து 19.5 கிலோ கிராம் நிறையுள்ள பாரிய கட்டியொன்றினை மருத்துவர்கள் மீட்டு சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் குறித்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினமான சனிக்கிழமை (05.10.2019) முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாகவும், இது சுமார் 2 மணித்தியாலம் இடம்பெற்றதன் பின்னர் அந்தக்கட்டி அகற்றப்பட்டுள்ளது.

மேலும், 19.5 கிலோ கிராம் நிறையையும் சுமார் 48 சென்ரி மீற்றர் நீளத்தையும் 34சென்ரி மீற்றர் அகலத்தையும் 23சென்ரி மீற்றர் உயரத்தையுமுடைய பெரும் கட்டி ஒன்றை வெட்டி அகற்றி குறித்த மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

இச்சத்திர சிகிச்சையை மேற்கொண்ட சத்திர சிகிச்சை நிபுணர்களான எஸ்.எஸ்.ஜமீல், பீ.கே.இரவீன்திரன், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் யுரேக்கா விக்ரமசிங்க, மயக்க மருந்து வைத்திய நிபுணர் றுவான் குருப்பு, மயக்க மருந்து மற்றும் சத்திரசிகிச்சை சிரேஷ்ட வைத்தியர்கள், சத்திர சிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட குழுவினரால் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.