விண்வெளியில் முதன்முதலில் நடந்தவர் காலமானார் (Video)

280

விண்வெளியில் முதன்முதலில் நடந்து சாதனை படைத்த முன்னாள் சோவியத் யூனியன் விண்வெளி வீரர் அலெக்ஸி லியோநோவ் (Alexei Leonov) காலமானார்.

அவருக்கு வயது 85. முன்னாள் சோவியத் யூனியன் சார்பாக 1965ம் ஆண்டு மார்ச் மாதம் விண்வெளி சென்ற லியோநோவ், விண்வெளியில் 12 நிமிடம் நடந்தார். இதன்மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் எனும் பெருமை அவருக்கு கிடைத்தது.

இதையடுத்து சோவியத் யூனியன்-அமெரிக்கா இணைந்து 1975ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பிய குழுவிலும் லியோநோவ் இடம்பெற்றிருந்தார். நிலவுக்கு சோவியத் யூனியன் சார்பில் முதன்முதலில் அனுப்ப தேர்வு செய்யப்பட்ட குழுவிலும் தேர்வு செய்யப்பட்டார்.

எனினும் அந்தத் திட்டம் சோவியத் யூனியனால் ரத்து செய்யப்பட்டதால் அவர் செல்லவில்லை. சோவியத் யூனியனின் விண்வெளி ஆராய்ச்சியில் தனது பங்களிப்பு முடிந்ததும், தனியாக லியோநோவ் தொழில் செய்து வந்தார். புத்தகம் எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

அவருக்கு சோவியத் யூனியனின் கதாநாயகன் விருது (Hero of Soviet Union) 2 முறை அளித்து கெளரவிக்கப்பட்டது. இந்நிலையில் வயோதிகம் காரணமாக ஏற்படும் நோய்க்காக மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் லியோநோவ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரஷியா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos) தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.