நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் திடீர் மரணம்!- உறவுகள் கொந்தளிப்பு

338

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்து கொண்டு சென்ற குடும்பத்தலைவர் உயிரிழந்ததை அடுத்து பொலிஸார் தாக்கியதால் தான் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஜே.ரூபன் (வயது – 40) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தவராவார்.

தாம் கைது செய்வதற்கு முன்னர், சந்தேகநபர் அலரி விதையை உட்கொண்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் அவர் வாந்தி எடுத்ததால் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார் என்றும் நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஒக்.10) வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

“குடும்ப வன்முறை தொடர்பில் குடும்பத்தலைவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பில் விசாரணைக்காக அவரை அழைத்த போதும் அவர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தராமல் தலைமறைவாகியிருந்தார்.

நேற்றைய தினம் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் நிற்பதாக பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்றிரவு 7.30 மணியளவில் அங்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெற்ற வேளை, இரவு 10 மணியளவில் அவர் வாந்தி எடுத்தார். தான் அலரி விதை உட்கொண்டதாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததால் உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.