யாழில் சிவாஜிக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவு கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் இன்று புதன்கிழமை(13) யாழ். நகர் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

“தமிழர்கள் ஏன் ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்?” எனும் தலைப்பிலான மேற்படி துண்டுப் பிரசுரம் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி செயற்பாடு தொடர்பாக தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் செயலாளர் எஸ். ராஜ்குமார் எமது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நாம் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு வழங்கும் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அதிகளவான மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களையே எம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் துண்டுப் பிரசுரமா? எனக் கேட்ட பின்னரே எம்மிடமிருந்து துண்டுப் பிரசுரங்களைப் பெற்றுச் செல்கின்றனர் என்றார்.

இதேவேளை, இன்றைய தினம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரக் கூட்டம் இடம்பெறும் நிலையில் நாங்கள் குறித்த இடத்திற்கு அண்மையாக கூட் டமைப்பினருக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினோம் . இதுதொடர்பாக நாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அறிவித்தும் எங்களைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் எனவும் அவர் வேதனை வெளியிட்டார்.

நன்றி: Tamiltwin .com