ஆயிரம் நாள் கண்ணீர் காத்திருப்பு (Video)

கடத்தப்பட்ட, கையளிக்கப்பட்ட பிள்ளைகளைக் காட்டு எனக் கேட்டு தாய்மார்களால் முன்னெடுக்கப்பட்டு ஆயிரம் நாட்களைக் கடந்த இப்படியான போராட்டங்கள் இதுவரை இலங்கையில் மட்டுமல்ல உலக அளவிலும் நடந்திருக்க முடியாதது.

தினமும் வேதனையுடனும் சிறிதளவு நம்பிக்கையுடனும் போராட்ட பந்தலுக்கு வரும் அம்மாக்களின் உள உணர்வுகளை ஆற்றாமைகளை அந்த A – 9 பிரதான வீதியில் சென்ற பலரும் பார்த்திருப்பார்கள். ஆயிரக்கணக்கானோரின் ஆறுதல் வார்த்தைகளையும் அந்தப் பந்தல் கேட்டிருக்கும்.

எத்தனையோ தாய்மாரின் கண்ணீரால் அந்தப் பந்தல் கழுவப்பட்டிருக்கும். போராட்ட பந்தலில் வேதனையை பகிர்ந்து கொண்ட சக தாய்மார்கள் பலர் பிள்ளைக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் ஏக்கத்துடன் இறந்தும் உள்ளனர்.

ஆனால், இராணுவத்திடம் தன்னுடைய கையால் கையளிக்கப்பட்ட மகனை எங்கே என்று காட்டு என கேட்கும் தாய்க்கு எந்தவிதமான பொறுப்பான பதிலையும் சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை வழங்கவில்லை.

எந்த இராணுவத்திடம் அல்லது பொறுப்பான அதிகாரியிடம் தாங்கள் பிள்ளைகளை கையளித்தோம் என உறவுகள் பெயரைக் கூட குறிப்பிட்டு சொல்கிறார்கள். அந்த இராணுவத்திடம் அல்லது அதிகாரியிடம் அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது என கேட்க மறுக்கிறது சிங்கள அரசாங்கம்.

எங்கள் சமூகம் விசித்திரமானது. எல்லா இடங்களிலும் விடுப்பு பார்த்தே கடந்து பழகிவிட்ட எங்கள் மக்களில் பலர் இந்த அம்மாக்களின் உறுதியான போராட்டத்தையும் விடுப்பாகவே பார்த்து கடந்து விட்டிருப்பர்.

ஆயிரம் நாட்களை கடந்தும் போராடும் அந்த பந்தலுக்கு ஒரு முறையாவது சென்று அந்த தாய்மார்களின் வேதனையை அக்கறையுடன் எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள்? என்பதனை நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.

உள வேதனையுடன் தவிக்கும் ஒருவரிடம் சென்று அவர் சொல்வதை அப்படியே காது கொடுத்து கேட்பது அவர்களின் உளவுரணை மேம்படுத்தும் என்பது உளவியலாளர்களின் கருத்து.

கோவில் கோவிலாக ஏறி இறங்கி பல சாத்திரக்காரர்களிடமும் கேட்டு தன் பிள்ளை இலங்கையில் எப்பக்கத்திலாவது உயிருடன் இருப்பான் என்கின்ற நம்பிக்கையில் தூக்கமில்லாமல் பல இரவுகளை கண்ணீருடன் கடந்த அந்த அம்மாக்கள் கனவிலும் வேண்டுவது தன் பிள்ளையைத் தான்.

கடத்தப்பட்ட தன் பிள்ளை, கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தன் பிள்ளை எங்காவது மூலையில் உயிருடன் இருப்பான் என்கிற நம்பிக்கையில் வயதான காலத்திலும் உயிரைக் கையில் பிடித்தபடி நீதி கேட்டலையும் நிலை இனி வரும்காலங்களில் எந்தத் தாய்க்கும் வரக் கூடாது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் கடந்த 15.11.2019 வெள்ளிக்கிழமை அன்று ஆயிரம் நாட்களை எட்டியுள்ளது.

இந்நிலையில் அன்றைய தினம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நிரந்தரமாக போராட்டத்தை முன்னெடுக்கும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலின் வெளியே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கபட்ட உறவுகளின் இணைப்பாளர் ராஜ்குமார்,
இலங்கை இராணுவத்தால் எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் கடத்தப்பட்ட காலத்திலிருந்து, நாங்கள் எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். ரணில், மைத்திரிபால, அமைச்சர்களை சந்தித்து கூறியபோதும் எதுவும் பலனளிக்கவில்லை.

எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் கூட உதவவில்லை. வலுக்கட்டாயமாக “காணாமல் ஆக்கப்பட்ட ” தமிழர்களை விடுவிப்பதற்கான சிறைச்சாலைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட நம் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிப்பதற்கு தொடர்ச்சியான உறுதியான போராட்டம் மட்டுமே ஒரு தீர்வைக் கொண்டுவரும் என்று பல சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் எங்களிடம் கூறின.

எங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர வலுவான நாடுகளால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ஐ.நா தொடர்பான சில அமைப்புகள் கூட எங்கள் போராட்டத்தை ஊக்குவித்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் சொல்வது ஒரு அப்பட்டமான பொய். காணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதில் 16 வயது சிறுமி ஜெரோமி காசிப்பிள்ளை , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எங்கள் தலைவி ஜெயவனிதாவின் மகள். அவர் 2015 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனாவோடு மற்ற சிங்கள மாணவர்களுடன் ஒரு பள்ளியில் காணப்பட்டார்.

1976 – 1983 க்கு இடையில் ஆர்ஜென்டினாவில் குழந்தைகள் கட்டாயமாக காணாமல் போனதை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஆர்ஜென்டினாவில் நடந்ததைப் போலவே, இந்த தமிழ் குழந்தைகளில் சில அரசாங்கத்திற்கு நெருக்கமான சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

அவர்களில் சிலர் சிங்கள பள்ளியிலும் , மீனவ வேலைக்கும் , மற்றவர்கள் கூலி தொழில்களிலும் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலர் புத்த மத பிக்குகளாக மாற்றப்பட்டனர். பல குழந்தைகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டில் 25,000 க்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகளும் மற்றவர்களும் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க அதே பொஸ்னிய பாணி நடைமுறை எங்களுக்குத் தேவை.

இறுதியில், பொஸ்னியாவில் ஒரு அரசியல் தீர்வை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது, இதனால் செர்பியர்கள், பொஸ்னியர்கள் மற்றும் குரோஷியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்கள் தங்கள் சுயராஜ்யத்துடன் போராடாமல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தது .

எங்களிடமிருந்து கடத்தப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்.

எங்கள் போராட்டத்தின் 2000 ஆவது நாளை அடைவதற்கு முன்பு, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் மக்களைக் கண்டுபிடித்து, நிரந்தர பாதுகாப்பையும், சுய ஆட்சியையும் எடுத்து கொள்வோம் என்று நம்புகிறோம். என்றார்.
இப்போதும் அந்தப் போராட்டம் ஆயிரம் நாட்களை கடந்தும் மனவுறுதியுடன் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.