பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வின் பின் எரித்துக் கொலை!- குற்றவாளிகள் நால்வரும் பொலிஸாரால் சுட்டுக் கொலை

இந்தியாவின் தெலுங்கானாவில் ஹைதராபாத் அருகே பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் போலிஸாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 27 ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டமை நாடெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தி இருந்தது.

பெண் மருத்துவர் கொலை வழக்கில் லொறி டிரைவர்கள், கிளீனர்கள் 4 பேரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன.

4 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து தெலங்கானா பொலிஸார் விசாரித்து வந்தனர்.
குற்றம் நடைபெற்ற இடத்திற்கு விசாரணைக்கு 4 பேரையும் அழைத்துச் சென்ற போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றதால் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளை பொலிஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளமைக்கு சமூகவலைத்தளங்களில் மக்கள் பரவலாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதே தண்டனை தான் ஏற்கனவே குற்றங்களைப் புரிந்த பாலியல் குற்றவாளிகளுக்கும் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.