யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மக்களுக்கு சேவை என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாழ்வதுதான் உண்மை. தமிழ் மக்களின் வேணவாக்களுக்காக தங்களின் சுயநலத்தை விட்டுக்கொடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி உண்மையான அமைதி நிலவ எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கிறிஸ்து பிறந்த நாளில் வலியுறுத்தியுள்ளார் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை.

கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2019ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதிலும் இன, மத, நிற, மொழி போன்ற வேறுபாடுகளின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் வேளை கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உண்மையில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த பெருவிழாவின் போது உலக கத்தோலிக்க திருச்சபை முழுவதிலும் பரந்து வாழும் மக்களால் பல்வேறு மொழிகளில் பாடப்படும் ஒரே இறைவார்த்தைப் பாடல் “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் நன்மனத்தோர்க்கு அமைதி உண்டாகுக!” (லூக். 2: 13-14) என்பதாகும்.

நல்மனம் இன்று எம் மத்தியில் அருகிக்கொண்டு போகின்றது. உண்மையான அமைதிக்கு, நல்ல மனம் வேண்டும். எங்களிடத்திலே போட்டி, பொறாமை, மற்றவர்களை இழுத்து விழுத்தும் செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மற்றவர்களை அன்பு செய்தல், அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவித்தல், மன்னித்து வாழுதல் போன்றன அருகிக்கொண்டு போகின்றன.

நமது குடாநாட்டில் மக்களுக்கு சேவை என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாழ்வதுதான் உண்மை. தமிழ் மக்களின் வேணவாக்களுக்காக தங்களின் சுயநலத்தை விட்டுக்கொடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி உண்மையான அமைதி நிலவ எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், அரசியல் கைதிகள் விவகாரம், மீள்குடியமர்வு, வேலையற்றோர் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்து செயற்பட அனைவரையும் வேண்டி நிற்கின்றோம்.

பாலகன் இயேசு இவ்வுலகிற்கு வந்து மக்களின் மனங்களில் அன்பு, பொறுமை, மன்னித்தல் போன்றவற்றின் மூலம் உண்மையான அமைதியை அடையலாம் என்பதை எமக்கு வாழ்ந்து காட்டி இருக்கின்றார். இதையே நாங்களும் இந்த கிறிஸ்து பிறப்பு காலத்திலே மற்றவர்களோடு, குறிப்பாக விதமாக ஏழைகளிடத்தில், பகிர்ந்து வாழ்ந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்.

இந்த பெருவிழாக்காலத்தில் கடவுளை மாட்சிப்படுத்தி, அவருக்கு உகந்தவர்களாக வாழ்ந்து, அமைதியை நிலைநாட்டும் மக்களாக மாற இறைவன் உங்களுக்கு துணை புரிவாராக. பிறக்க இருக்கின்ற பாலகன் இயேசுவின் அன்பும், அருளும், பாதுகாப்பும், வழிநடத்துதலும் இவ்விழாவைக் கொண்டாடும் உங்கள் அனைவரோடும் என்றும் இருக்க இறை ஆசீர் வேண்டுகின்றோம்.

படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்-