பேரெழுச்சியுடன் இடம்பெற்ற யாழ். பல்கலை மாணவர்களின் தமிழமுதம் விழா (Photos)

173

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழமுதம் விழா இன்று புதன்கிழமை(08) சிறப்பாக நடைபெற்றது. முதலாவது தமிழமுதம் விழா கடந்த-2018 இல் சிறப்பாக நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் 2019 ஆம் ஆண்டுக்கான தமிழமுதம் விழா சிறப்பாக இடம்பெறுகிறது.

தமிழின் தனித்துவத்தையும், பெருமையையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற மேற்படி விழா இன்று காலை-08.15 மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள சிவன்- அம்மன் கோயில் முன்றலில் மாபெரும் கலாசார ஊர்வலப் பவனியுடன் ஆரம்பமாகியது.

குறித்த பவனியில் கரகாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், குதிரையாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியக் கலை வடிவங்கள் அரங்கேறிப் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது.

குறித்த கலாசார ஊர்வலப் பவனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைந்ததைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் மங்கல விளக்கேற்றலுடன் சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பமானது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் என். திவாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வடக்கு மாகாணத்தின் புதிய பெண் ஆளுநர் திருமதி -பி.எஸ்.எம்.சாள்ஸ், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பிரமுகர்கள், மும்மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர், தமிழ்ப் பற்றாளர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழரின் பாரம்பரிய கலை, கலாசாரத்தைப் பறைசாற்றும் பல்வேறு கலைநிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.

பண்பாட்டு மலர்ச்சி கூடமும் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து வழங்கிய நாடக ஆற்றுகை நிகழ்வு இறுதி நிகழ்வாக பேரெழுச்சியுடன் நடைபெற்றிருந்தது.