இந்தியாவில் தொடா்ந்து 8-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயா்வு

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 8-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உயா்ந்துள்ளது.

அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவு தலைவா் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. அதன் எதிரொலியாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சவூதி அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது, கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5 சதவீதம் அதிகரித்திருந்தது.

இந்நிலையில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெள்ளிக்கிழமை (ஜன.9) வெளியிட்ட அறிவிப்பின்படி, சென்னையை பொருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகளும் அதிகரித்தது ஒரு லிட்டர் ரூ.72.85 ஆகவும் விற்பனையாகி வருகின்றன. தொடா்ந்து 8-ஆவது நாளாக எரிபொருள்கள் விலை உயா்ந்துள்ளன.

எரிபொருள்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் எரிபொருள் தேவையில் 84 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பூா்த்தி செய்யப்படுகிறது. இதில், இராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.