அரசியல் சார்ந்த விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது!- கைவிரித்தது பேஸ்புக்

அரசியல் சார்ந்த விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது எனவும், ஆனால் அவற்றை பயனாளர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பல விதமாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கு பதிலளித்துள்ள பேஸ்புக், அரசியல் விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது. ஆனால் அவற்றை பயனாளர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும். அரசியல் விளம்பர கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முடியாது என தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் திட்ட மேலாண்மை இயக்குனர் ரோப் லேதர்ன் கூறுகையில், விளம்பர கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு பதிலாக, சிறு மாற்றங்களை கொண்டு வர உள்ளோம்.

பிரசாரங்களுக்கான விளம்பரங்களை பத்திரிகையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்தி தரம் பிரித்து வழங்க முடிவு செய்துள்ளோம்.

பல பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று, பிரசாரம் மற்றம் அரசியல் விவகாரங்கள் சார்ந்த விளம்பரங்களை வெகுவாக குறைக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.