உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் கால்கோள் விழா 2020 கோலாகலம் (Video)

262

யாழ்ப்பாணம் வடமராட்சி – உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் புதிய ஆண்டுக்கு தரம் 1 மாணவர்களை இணைத்துக் கொள்ளும் கால்கோள் விழா 16.01.2020 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான பாடசாலை முன்றலில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இமையானன் மேற்கு கிராம சேவையாளர் T. சுதர்சன் கலந்து சிறப்பித்திருந்தார்.

புதிதாக இணைந்த 49 மாணவர்களை தரம் 2 மாணவர்கள் பூங்கொத்துக்களை கொடுத்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை, அதிபர் உரை, பொறுப்பாசிரியர் உரை என்பன இடம்பெற்றன.

அதிபர் தனதுரையில் முக்கியமாக தெரிவிக்கையில்,

மாணவர்கள் நேரகாலத்துக்கு பாடசாலைக்கு வருவதனை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். இயன்றவரை விடுமுறை எடுக்காமல் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதனை பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் காலை சாப்பாட்டில் பெற்றோர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக ஆரோக்கியமான உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். இன்று பல பெற்றோர்கள் ஒழுங்காக சாப்பாடு செய்து கொடுக்காத நிலை உள்ளது. இந்நிலை மாற வேண்டும். இங்கு சேர்த்துவிட்டு இடையில் மாணவர்களை வேறு பாடசாலைக்கு மாற்றுவதனை பெற்றோர்கள் கைவிட வேண்டும். என்றார்.

ஆரம்பப்பிரிவு பொறுப்பாசிரியர் முக்கியமாக தனது உரையில்,

ஆரம்பப்பிரிவு மாணவர்கள் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டதால் தேசிய மட்டம் வரை சென்றுள்ளனர். அதே போல் மாணவர்கள் படிப்பிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், தரம் 5 க்கு பின்னர் வேறு பாடசாலையில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் சிலர் முயல்வது வேதனையளிக்கிறது. இங்கு உயர்தரம் வரை மிகச் சிறப்பான கல்வியே வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தரம் 5 ற்கு பிறகு பிள்ளைகளை வேறு பாடசாலைக்கு மாற்றும் எண்ணமுள்ள பெற்றோர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

பிரதம விருந்தினர் தனதுரையில்,

நானும் இந்தப் பாடசாலையின் பழைய மாணவன் தான். இன்று எங்கள் பாடசாலையின் வளர்ச்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியளிக்கிறது. பாடசாலை மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் மிகத் திறமையாக செயல்பட்டு சாதனை படைத்து வருகின்றார்கள். தொடர்ந்தும் இந்தப் பாடசாலைக்கு தேவையான என்னால் இயன்ற உதவிகளை பெற்றுக் கொடுப்பேன். என்றார்.

பிரதம விருந்தினர் அன்பளிப்பு செய்த சிறிய தொகையில் இருந்து புதிய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகளும் வழங்கப்பட்டன.

தரம் 03 மாணவர்களின் கைவண்ணங்களில் உருவான பல்வேறு கைவினைப் பொருள்களுடனான சிறிய கண்காட்சியொன்றும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து இலங்கை வங்கி நெல்லியடி கிளையினரால் புதிதாக இணைந்த மாணவர்களுக்கு 250 ரூபாய் வைப்பிலிடப்பட்ட சிறார்களுக்கான வங்கிக் கணக்கு புத்தகத்துடன் அப்பியாச கொப்பிகளும் பரிசாக வழங்கப்பட்டன.

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் கூட்டு செயற்பாட்டில் கால்கோள் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் தேசிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் கால்கோள் விழாக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.