ஈழத்தமிழ் பாடகி மாயாவுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் உயர் விருது (Photos)

சர்வதேச ரீதியில் அதிகம் கவனிக்கப்படும் லண்டன்வாழ் ஈழத்தமிழ் பாடகியான எம்.ஐ.ஏ. எனும் மாதங்கி மாயா அருள்­பி­ர­கா­சத்­துக்கு (MIA) பிரித்­தா­னிய சாம்ராஜ்­யத்தின் அங்­கத்­த­வ­ருக்­கான எம்.பி.ஈ (Member of the Order of the British Empire -MBE) விருது வழங்­கப்­பட்­டுள்­ளது. சர்வதேசத்தில் இசைத்­து­றைக்கு ஆற்­றிய பங்­க­ளிப்­புக்­காகவே அவ­ருக்கு இவ்­வி­ருது வழங்­கப்­பட்­டுள்­ளது. லண்­ட­னி­லுள்ள பக்­கிங்ஹாம் அரண்­ம­னையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற வைபவத்தில் பாடகி எம்.ஐ.ஏவுக்கு பிரிட்­டனின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் வில்­லியம் இந்த விருதை வழங்­கி கௌரவித்தார்.

இலங்­கை­யி­லி­ருந்து பிரிட்­ட­னுக்குப் புலம்பெயர்ந்த பின் தையல் தொழிலில் ஈடு­பட்ட தனது தாயார், இவ்விருதுக்­கான பதக்­கத்­தையும் தயா­ரித்தார் எனவும் இதனால், இவ்­வி­ரு­துடன் தனக்கு ஒரு வர­லாற்றுத் தொடர்பு உள்­ளது எனவும் 44 வய­தான பாடகி எம்.ஐ.ஏ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மாதங்­கியின் தந்தை அருள்­பி­ர­காசம் (அருளர்) ஈழப்­போ­ராட்­டத்தின் முன்­னோ­டி­களில் ஒருவர் என்­பது குறிப்பிடத்­தக்­கது. ஈரோஸ் இயக்­கத்தின் ஸ்தாப­கர்­களில் ஒரு­வ­ரான அருளர், லங்கா ராணி எனும் நூலையும் எழுதினார். கடந்த மாதம் அருளர் கால­மா­கியிருந்தார்.

இலங்­கை­யி­லி­ருந்து பிரிட்­ட­னுக்குச் சென்ற அருள்­பி­ர­காசம், கலா தம்­ப­தியின் மக­ளாக 1975 ஜூலை 18 ஆம் திகதி லண்­டனில் பிறந்­தவர் மாதாங்கி. அவர் 6 மாத குழந்­தை­யாக இருந்­த­போது அவரின் பெற்றோர் இலங்கைக்குத் திரும்­பினர்.

மாதங்கி யாழ்ப்­பா­ணத்தில் தனது ஆரம்பக் கல்­வியை கற்றார். யுத்தம் தீவி­ர­ம­டைந்த நிலையில் 1986 ஆம் ஆண்டு மாதங்­கிக்கு 11 வய­தாக இருந்­த­போது அவரின் குடும்பம் மீண்டும் லண்­ட­னுக்குத் திரும்­பி­யது.

2000 ஆம் ஆண்டு இசைத்­து­றையில் கவனம் செலுத்த ஆரம்­பித்தார் மாதங்கி. தற்போது மேற்­கு­லக இசைத்­துறையில் மிகப் பிர­ப­ல­மான பாட­கி­களில் ஒரு­வ­ராக மாதங்கி மாயா அருள்­பி­ர­காசம் (44) விளங்­கு­கிறார்.

2004 ஆம் ஆண்டு சண்­ஷவர், காலாங் ஆகிய பாடல்கள் மூலம ரசி­கர்­களின் கவனத்தை ஈர்த்த மாதங்கி, 2005 ஆம் ஆண்டு அருளர் எனும் பெயரில் தனது முதல் பாடல் அல்­பத்தை வெளியிட்டார். 2007 ஆம் ஆண்டு தாயார் கலாவின் பெயரில் கலா எனும் 2 ஆவது பாடல் அல்­பத்தை வெளியிட்டார். கலா அல்­பத்தில் இடம்­பெற்ற பேப்பர்­பிளேன்ஸ் எனும் பாடல் எம்.ஐ.ஏவுக்கு பிரிட்டன், கனடா, அமெ­ரிக்கா உட்­பட பெரும் புகழை ஈட்டிக் கொடுத்­தது.

மேற்­கத்­தேய இசைத்­துறையில் முன்­னிலை கலை­ஞர்­களில் ஒரு­வ­ரானார் எம்.ஐ.ஏ. அமெ­ரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக் இறுதிப் போட்­டியின் இடைவே­ளையில் இசை நிகழ்ச்சி நடத்­து­வது பல கலை­ஞர்­க­ளின் கனவாகும். 2012 ஆம் ஆண்டு நடை­பெற்ற சுப்­பர்பொல் இசை நிகழ்ச்­சியில் பாட­கிகள் மடோனா, நிக்கி மினாஜ் ஆகி­யோ­ருடன் எம்.ஐ.ஏ. எனும் மாதங்­கியும் பங்­கு­பற்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.