யாழ் வர்த்தக கண்காட்சியில் முதன் முறையாக ‘எங்கட புத்தகம்’ சிறப்பு காட்சிக் கூடம்

215

யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியான முற்றவெளியில் வரும் வெள்ளி, சனி, ஞாயிறு 24, 25, 26 ஆம் திகதிகளில் இடம்பெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் முதன் முறையாக ‘எங்கட புத்தகம்’ எனும் தலைப்பில் எம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் அணிவகுக்கும் சிறப்பு புத்தக கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளது.

நூறுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் 1500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தக் காட்சிக் கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பருத்தித்துறை நண்பர்கள் அமைப்போடு இணைந்து யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்தினரின் ஒத்துழைப்புடன் சமூக ஆர்வலரும், இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளருமாகிய குலசிங்கம் வசீகரன் தலைமையிலான குழுவினர் குறித்த கண்காட்சிக்கான ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே வருடம் தோறும் இடம்பெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிவது வழமையாகும். இம்முறை கூடுதலாக இடம்பிடிக்கும் “எங்கட புத்தகம்” கண்காட்சி கூடம் எம் எழுத்தாளர்களுக்கும் – வாசகர்களுக்குமான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும்.

எங்கள் எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஒரே குடையின் கீழ் வருவதில்லை என்கிற நீண்டகால குறை நிச்சயம் இம்முறை நிவர்த்தி செய்யப்படும். எம்மவர்களின் கிடைத்தற்கரிய புத்தகங்களை தேடும் வாசகர்கள் அதனை “எங்கட புத்தகம்” காட்சிக் கூடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

சகல புத்தகங்களுக்கும் 10 வீதம் கழிவும், சில புத்தகங்களுக்கு 25 வீதம் வரை கழிவுகளும் வழங்கப்படவுள்ளன. எம் வாசகர்களுக்கு மட்டுமல்ல எழுத்தாளர்களுக்கும் உற்சாகமான ஒரு தருணமாகவும் இம்முறை கண்காட்சி அமையவுள்ளமை சிறப்பானதாகும்.