நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கூடாது ஆனால் சாகவும் கூடாது

95

உங்களின் ஆரோக்கியம் இன்றைய அளவில் வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டு விட்டது. உங்களை வந்து ஒரு நோயாளியாக ஆக்க வேண்டும். அந்த நோயாளி சாகக் கூடாது. இந்த இரண்டிலும் கவனமாக இருப்பார்கள்.

நீங்கள் நிறைய வேலை செய்ய வேண்டும். உழைக்க வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டும். அதில் பெரும் தொகையை உங்களின் ஆரோக்கியத்துக்காக செலவழிக்க வேண்டும்.

எஙகளின் தாத்தா வைத்தியத்துக்கு செலவழித்த காசை விட எங்களின் அப்பா, அம்மா செலவளிக்கிற காசு கூட. இதை விடக் கூடக் காசை நீங்கள் செலவழிப்பீர்கள் உங்களின் பிள்ளை அதைவிடக் கூடக் காசு செலவழிக்கப் போகிறது. இதை நோக்கித் தான் உலகம் இயங்குகிறது.

உலகப் பணக்காரர்களை பாருங்கள். பெரும்பாலும் அவர்களின் முதலீடுகள் ஆரோக்கியம் சார்ந்த வணிகத்தில் தான் இருக்கும்.

இன்றைய தொலைக்காட்சி விளம்பரங்கள் தான் மனித மனங்களில் அதிகம் ஆட்சி புரிகின்றன. நான் நிறைய தொலைக்காட்சி விளம்பரங்கள் பார்ப்பேன். அதிலும் கோல்கேட் பற்பசை விளம்பரங்களை நான்கு வருடங்களாக பார்த்து வருகின்றேன். அதில் கவனித்தீர்கள் என்றால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு சிறப்பை பற்றி சொல்லி வருவார்கள். முதலில் உப்பு இருக்கு, பிறகு கொஞ்ச நாளால கரி இருக்கு, பின் வேம்பு சேர்த்திருக்கு என்பார்கள். இப்ப பார்த்தீங்க என்றால் ஒரு ஐந்து வகையான மூலிகை இருக்கிறது என்று சொல்லி அடித்து விடுகிறார்கள்.

ஹோர்லிக்ஸ் விளம்பரமும் இப்படித்தான். முதலில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த்தினார்கள். பின் இப்போது எல்லா வயதினருக்கும் அறிமுகப்படுத்தி விட்டார்கள். எல்லா வயதினருக்குமான ஹோர்லிக்ஸ் எல்லா சத்துக்களுடனும் கிடைக்கிறது என்றால் பேசாம ஹோர்லிக்ஸ் ஐயே குடித்துக் கொண்டிருங்களேன். ஏன் சாப்பிடுகின்றீர்கள்?

இப்படி மாறிவரும் நிலையில் இருந்து நீங்கள் தப்ப வேண்டும் என்றால் உங்கள் உணவுப் பழக்கம் மாற வேண்டும். உணவுப்பழக்கம் மாற வேண்டும் என்றால் இயற்கை விவசாயம் வர வேண்டும்.

இப்படியான இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்வுகளுக்கூடாக தான் உங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்பது தெரியவரும். இப்படியான இடங்களை தவிர வேறு எங்கேயும் உங்களுக்கு இந்தமாதிரி விழிப்புணர்வு கிடைக்காது. இப்படியான இயற்கை விவசாயம் சார்ந்த அமைப்புக்களின் சுய சிந்தனை, சுய பொருளாதாரம் சார்ந்த குழுக்களின் மூலம் தான் விழிப்புணர்வுகளைப் பெற முடியும். சமூக வலைத்தளங்களில் எந்த நடிகர்களும் வந்து சொல்லப் போவதில்லை. எந்த விளம்பரங்களும் இதனைக் காட்டப் போவதில்லை. ஏனென்றால் இதனை கதைத்தால் உலகத்தின் முதலீட்டின் போக்கு மாறும். பங்குச் சந்தை நிலைமைகள் மாறும்.

ஆனால், இன்று மாறி வரும் நிலையில் பல்தேசிய நிறுவனங்கள் திரும்பவும் ஓர்கானிக் ஐ கையில் எடுப்பது மக்களை முட்டாளாக்கும் வேலை.

இங்கு அல்லை விவசாயி கிரிசன் இலைக்கஞ்சி தொடர்பிலான விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகிறார். இலைக்கஞ்சியை நோக்கி எல்லோரும் ஓட வெளிக்கிட்டு, அதற்கு ஒரு பெரும் கேள்வி இருக்கும் போது பெருநிறுவனங்களின் பாரிய முதலீடுகள் இதற்குள்ளும் பாயும். இலைகளை பவுடராக்கி தண்ணீரில் கலந்து குடியுங்கோ என்று தருவார்கள். அவர்கள் நடிகர்களிடமும் விளம்பரம் எடுத்து வெளியிட்டு அதனையும் ஆரோக்கியம் சார்ந்த வியாபாரமாக்கி விடுவார்கள்.

உங்களுக்கு ஒன்றை திரும்ப திரும்ப சொன்னால் ஒரு கட்டத்தில் உண்மை என நம்பி விடுவீர்கள். பல்தேசியக்கம்பனிகள் பலகோடி செலவழித்து விளம்பரப்படுத்தும் விடயங்களிலும் இது தான் நடக்கிறது.

உங்கள் ஆரோக்கியம் சம்பந்தமாக அக்கறை இருந்தால் வீட்டு தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். முதலில் எங்கள் விவசாய கல்லூரியில் இருக்கிற வீட்டு தோட்டத்தில் மரக்கறிகள், இலைவகைகளை இயற்கை முறையில் பயிரிட்டு வீட்டுக்கும் எடுத்து செல்லுங்கள். முதலில் நாங்கள் மாறுவோம். பின் எங்கள் குடும்பத்தையும் மாற்றுவோம். பின் சமுதாயமும் மாறும்.

இப்போது ஒரு வாரம் தேநீர் அருந்துகிறோம் என்றால் அதில் இரண்டு நாட்களில் மட்டும் இலைக்கஞ்சி அருந்துவோம். இதனை நாங்கள் ஒரு சபதமாக எடுத்தோம் என்றால், எம்மிலிருந்தே மாற்றம் தொடங்கட்டும்.

இயற்கை வழி இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – மருதனார்மடம் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனத்தில் இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு 09.01.2020 வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் விவசாய விரிவுரையாளர், விவசாய ஆலோசகரான கணபதிப்பிள்ளை சுறேன் ஆற்றிய உரையே இதுவாகும்.