இயற்கை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகும் இயற்கை அங்காடிகள் (Video)

இயற்கை வழி இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு முதல் நிகழ்வாக இயற்கை வழி செயற்பாட்டாளர் வசீகரன் அவர்களின் யாழ்ப்பாணம் ஊரெழுவில் அமைந்துள்ள மார்கோசா விடுதியின் முன்றலில் இயற்கை அங்காடி திறப்பு விழா கடந்த 08.01.2020 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

குறித்த அங்காடியை கல்வியியலாளரும், சமூக சேவையாளருமான நடராஜா அனந்தராஜ் அவர்கள் திறந்து வைத்தார்.

இன்று இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் பலரும் எதிர்கொள்ளும் பிரதான கேள்வி உற்பத்தி செய்த பொருள்களை எப்படி சந்தைப்படுத்துவது என்பதாகும். ஏற்கனவே இயற்கை வழி இயக்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட இயற்கை அங்காடியில் விற்பனை வாய்ப்புக்கள் நன்றாகவே இருந்தன.

இப்போது பல்வேறு இயற்கை விவசாயம் சார்ந்த அமைப்புக்கள் வேறு வேறு இடங்களிலும் இயற்கை அங்காடிகளை தொடங்கியுள்ளன. இவை வரவேற்கத்தக்க முயற்சிகளாகும்.

இப்போது யாழ்ப்பாணத்தின் கஸ்தூரியர் வீதியில் உள்ள அல்லை விவசாயி ஆரோக்கிய விற்பனை நிலையம், யாழ் முற்ற அங்காடி, இயற்கை வழி இயக்கத்தின் ஆனைக்கோட்டை அங்காடி, கொக்குவிலில் அமைந்துள்ள சீர்பயோ நிறுவனத்தின் பண்ணை வாயில் அங்காடி, காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள மானிடம் பண்ணையின் அங்காடி, திருநெல்வேலி விவசாய நிலையத்தில் சேதன அமைப்பின் அங்காடி, ஊரெழுவில் உள்ள இயற்கை அங்காடி, மருதனார்மடம் விவசாய நிறுவன அங்காடி, மாவிட்டபுரம் திருநாவுக்கரசு மாதிரிப்பண்ணையின் பண்ணை வாயில் அங்காடி போன்ற இடங்களில் இயற்கையில் விளைந்த மரக்கறிகள், பழங்கள், இலை வகைகள், இயற்கை கரைசல்கள் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு கிராமங்கள் தோறும் இயற்கை அங்காடிகள் பெருகுமாக இருந்தால் இயற்கையில் விளையும் மரக்கறிகள், இலை வகைகளை இலகுவாக மக்களிடம் சேர்க்க முடியும். அதுவும் இயற்கை விவசாயிகளிடம் இருந்து இரசாயனம் பாவிக்காத ஆரோக்கியத்துக்கேற்ற உற்பத்திகளை பெற முடியும்.

ஊரெழுவில் உள்ள அங்காடியில் அப்பிரதேசத்தை சூழவுள்ள இயற்கை விவசாயிகள் இலகுவாக சந்தைப்படுத்த முடியும். இயற்கை விவசாயம் அடுத்த கட்டத்துக்கு போவதற்கு விற்பனை வாய்ப்புக்களையும் அதிகரிக்க வேண்டும். அடிக்கடி விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக தான் இவ்வாறான முயற்சிகள் பொதுமக்களை சென்றடையும்.

வருங்கால சந்ததி நோய் நொடியின்றி வாழ வேண்டுமாக இருந்தால் பாரம்பரிய விவசாயத்தை நோக்கி நாம் நகர வேண்டும். இயன்றவரை எல்லோரும் வீட்டு தோட்ட செய்கையினை முன்னெடுக்க வேண்டும். அதன்மூலம் எமக்கான இயற்கையில் விளைந்த மரக்கறிகளை நாமே உற்பத்தி செய்ய முடியும். மேலதிகமான மரக்கறிகளை இயற்கை அங்காடிகளுக்கும் வழங்கலாம். இன்னொரு வீட்டு தோட்ட செய்கையாளரிடம் பண்டமாற்று மூலமும் பரிமாறிக் கொள்ள முடியும்.

கிராமங்கள் தோறும் இயற்கை அங்காடிகள் பெருக வேண்டும்.