மீண்டும் மக்களை ஏமாற்ற களமிறங்கும் போலி அரசியல்வாதிகள் (Video)

“உயர்ந்தவர்கள் நாமெல்லோரும் உலகத் தாய் வயிற்று மைந்தர் நசிந்து இனிக் கிடக்க மாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்.  நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்”. 

“ஒன்றாய் கூடி ஒன்றாய் பாடி, ஊர் உயர, உலகு உயர… ஊர் ஊராய் நாங்கள் பாடி வாறோம். ஊர் உயர நாங்கள் தேடி வாறோம். மனிதம் மீட்க பாடி வாறோம். மானிடம் நிமிர ஆடி வாறோம்.” 

யாழ்ப்பாணம் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் ஊர் உயர ஒன்றுகூடுவோம் தெருவெளி அரங்கு வடக்கின் பல கிராமங்களில் இடம்பெற்றது. அந்தவகையில் உரும்பிராய் வடக்கு சரஸ்வதி கிராமத்தில் இடம்பெற்ற தெருவெளி அரங்கில் இருந்து சில காட்சிப்பதிவுகளை இந்த காணொளியில் காணலாம்.
இந்த ஆற்றுகை நிகழ்வில் கேள்வி கேட்கும் துணிவுடன் எழுந்த மக்களாக கிராமங்கள் தோறும் பேரெழுச்சியுடன் மக்கள் திரண்டனர். 

“மக்களுக்கு பொய் சொல்லி ஏமாற்றுகிற, ஒருத்தனுக்கு 10 வீடு கட்டுற, 10 வாகனம் வாங்குற ஏமாற்று வேடதாரிகளை இன்று மக்கள் மத்தியில் விட்டிருக்கின்றார்கள்.  தங்களின் குடும்பங்களின், தங்களின் வயிற்றை நிரப்புவதற்காக,  போலி அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற வரப்போகிறார்கள். எங்களின் பிள்ளைகளை அழிச்சுப் போட்டு, எங்கட கிராமங்களை அழிச்சுப் போட்டு,  எங்கள் மக்களை அழிச்சுப் போட்டு வரும் இவர்களுக்கு பதில் நீங்கள் சொல்வது தான். “நாங்கள் உணர்வுகளோடு தான் வாழுகின்றோம்”. இந்தப் போலியான அரசியல்வாதிகளுக்கு இங்கே இடமில்லை என்கிற ஆக்கள் கையை உயர்த்தி காட்டுங்கோ பார்ப்போம்” என்று மூத்த அரங்க நெறியாளரும், நாடகமும் அரங்கியல் துறையின் முதுநிலை விரிவுரையாளரும்,  பண்பாட்டு மலர்ச்சிக் கூட நிறுவனருமான கலாநிதி சிதம்பரநாதன் அவர்கள் சொன்னதும் அங்கு திரண்டிருந்த மக்களில் கணிசமானோர் கையை உயர்த்தினார்கள். 

நாங்கள் ஒரு புதிய வாழ்க்கையை அமைக்க வேண்டும். மக்களின் மனத்தை அறிந்த தலைவர்கள் உருவாகட்டும். என்று தொடர்ந்தது மக்கள் மத்தியில் அவரது பேச்சு. 

இன்று தேர்தல் அரசியல் என்பது வெறும் கூத்தாகி வெறும் ஏமாற்றாகி மக்களை சின்னாபின்னப் படுத்துகின்ற ஒன்றாகிப் போன பிறகு நாங்கள் இன்னொரு விடயத்தை யோசிக்கின்றோம். பண்பாட்டு ரீதியாக இந்த மக்களை மீளெழுச்சிக்கு உட்படுத்த வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் பண்பாட்டு மலச்சிக் கூடத்தை ஆரம்பித்தோம்.  அந்தவகையில் கிராமங்கள் தோறும் இப்படியான நிகழ்ச்சிகளை ஒருங்கமைப்பது, மக்களை கூட வைப்பது மக்களுக்கிடையில் ஒரு பகிர்வை உருவாக்குவது தான் எங்களுடைய ஒரு முக்கியமான நோக்கமாக உள்ளது. இதனை நாங்கள் தொடர்ந்து செய்வோம். 
மக்களிடம் ஒரு வித சடத் தன்மையை, அவர்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட் தன்மையை எல்லா இடங்களிலும் நாங்கள் அவதானித்தோம்.    போய்க் கிராமங்களைப் பார்த்தால் கிராமங்களின் தெருக்களில் மக்கள் இல்லை. முந்தி நாங்கள் சிறுவர்களாக இருந்த போது கிராமங்களின் தெருக்களில் நாங்கள் கூடி நிற்கிறனாங்கள்.  கதைக்கிறனாங்கள். பகிடிகள் விடுறனாங்கள். சிரிக்கிறனாங்கள். இப்போது அப்படியான காட்சிகளை பார்ப்பதென்பதே அரிதாகி விட்டது.  கடந்த முறை ஊர்களுக்கு சென்ற போது அங்குள்ள நிலைமைகளை பார்க்க ஒரு வித பயத்தை தந்தது. 

இப்படியான கலை பண்பாட்டு செயற்பாடுகளூடாக மக்களை   மெல்ல மெல்ல கொண்டுவர முயன்றோம். இந்தமுறை என்னவென்று சொன்னால் அதனை நாங்கள் இன்னும் கொண்டாட்டமாக்கி இருக்கின்றோம்.  இவையெல்லாம் மக்கள் மத்தியில் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தும். நாங்கள் எல்லா இடங்களிலும் ஒன்றை அவதானித்தோம். எல்லாருக்கும் நாங்கள் ஒன்றாய் சேர வேண்டும் என்று அடியில அந்த உணர்விருக்கு. 

கொட்டடியில் வயோதிப தாய் ஒருவர் சொன்னார், “நாங்கள் ஒரே கிராமம். ஒரே மக்கள். நாங்கள் ஒன்றாகவே நிற்கிறோம். எங்களை யாரும் ஏமாற்றவே முடியாது”. உண்மையில் அவர்களுக்கு அடி மனதிலே “நாங்கள் ஒன்றாய் சேர வேண்டும் என்கிற அந்த ஆசை இருக்கிறது”.
 
  தெருவெளி அரங்கு என்பது தெருவுக்கு அருகில் இருக்கின்ற மக்கள் கூடக்கூடிய வெளியை தெரிவு செய்து அந்த வெளியிலே மக்களை கூட செய்து மக்களிடம் குதூகலம் வந்து, இங்கே பார்த்தீர்கள் என்றால் தெரியும். இந்த ஊர்ப் பிள்ளைகள் வந்து கூடியிருந்து விளையாடுகிறார்கள். கூட்டின் இனிப்பை அவர்கள் அனுபவிப்பார்கள். கூட்டின்  பகிர்வில் வருகின்ற சந்தோசத்தை பேரானந்தத்தை அவர்கள் அனுபவிப்பார்கள். அதற்கு இடம் அமைத்துக் கொடுப்பது தான் இந்த அரங்கு. 

“நீங்கள் எங்களுக்கு ஒற்றுமையை பழக்குகின்றீர்கள்”. என்று நவாலியில் ஒரு பெண் கூறினார். இந்த அரங்கு அவர்களிடம் மறைந்துள்ள அந்த கூட்டு உணர்வை, கூட்டு வாழ்க்கையை, ஒற்றுமையை  வெளிக்கொண்டு வரும். எங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். எங்கள் கிராமங்கள் செழிக்க வேண்டும். எங்கட கால்களில் நாங்கள் நிற்க வேண்டும்.