‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அலட்சியமாக இல்லாமல் மக்கள் அனைவரும் பொறுப்புடன் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருக்குமாறு தனது நகைச்சுவை பாணியிலேயே அறிவுறுத்தியுள்ளார் நடிகர் வடிவேலு.

கரோனா வைரஸ் தாக்கம் கலக்கத்தை ஏற்படுத்திய நாள் முதலே தமிழகத்தில் நடிகர் வடிவேலுவின் வசனங்களைக் கொண்டு மீம்ஸ் போட்டுக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில் தனது படக்காட்சிகளின் பாணியிலேயே மக்களுக்கு அறிவுரை சொல்லியுள்ளார்.

அவர் பேசியதிலிருந்து..

கரோனா பாதிப்பு ஆரம்பித்த நாள் முதலே இந்திய மக்கள் எல்லாம் அரண்டு மிரண்டு போய் இருக்கிறார்கள். காரணம் மொழி புரியாம வந்த விழிப்புணர்வு ரிங்டோன். ரிங்டோனில் இருமலுடன் அறிவுரை வந்தாலும் வந்தது. யார் இருமினாலும் அவர்களைக் குறுகுறுவென்று பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. பயப்படாதீங்க. ஆனா விழிப்புணர்வோடு இருங்க. நல்லா கிளப்புராய்ங்கயா பீதியன்னு நான் விளையாட்டாக சொன்னது இப்ப உலகம் முழுவதுமே உண்மையிலேயே நடக்குது.

நான் கூட ஒரு சினிமாவில் தேக்குடா முடியுமா என்றொரு டயலாக் பேசியிருப்பேன். ஆனால் நிஜத்தில் அதெல்லாம் எடுபடாது. தேக்குடா என்றெல்லாம் பேசி அசட்டையா இல்லாம விழிப்போடு இருங்க. வெளிநாட்டில் இருந்து என் நண்பர்கள் ஏன் தமிழ்நாட்டு மக்கள் இப்படி அசட்டையா இருக்காங்குன்னு கேட்கிறார்கள்.

தயவு செய்து கவனமா இருங்க ரோட்டில் சளி துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற பழக்கங்களைக் கைவிடுங்கள். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கூட்டம் கூடாதீங்க, சங்கத்த கலைங்க, டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க. கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டால் மருத்துவர்களுக்கு சிரமம் குறையும்.
இவ்வாறு நடிகர் வடிவேலு பேசினார்.