ஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களே என தெரிவித்துள்ளார் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் புஷ்பா ராமியானி டி சொய்சா.

கொழும்பு தேசிய வைத்தியசாலை நிலவரத்தின் அடிப்படையில், தனது சமூக ஊடக பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

வழக்கமாக தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சைப் பிரிவில் நாளாந்தம் 250 வரையான நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், எனினும் ஊரடங்கு அமுலில் இருந்த காலப்பகுதியில் 66 நோயாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள். அதிலும், கணவனால் தாக்கப்பட்ட குடும்பப் பெண்களே அதிகமாக அனுமதிக்கப்பபட்டுள்ளனர்.

“இந்த குடும்பங்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க இந்த மதிப்புமிக்க ஓய்வுக்காலத்தை பயன்படுத்த முடியாதது துரதிர்ஷ்டவசமானது” என குறிப்பிட்டுள்ளார்.