கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர்கள் அனைவரும் தயவு செய்து உங்கள் வீடுகளிலேயே இருந்து சாவைத் தழுவிக் கொள்ளுங்கள்

“கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர்கள் அனைவரும் தயவு செய்து உங்கள் வீடுகளிலேயே இருந்து (சாவைத் தழுவிக்) கொள்ளுங்கள்”

– இத்தாலிய அரசால் விடுக்கப்பட்ட அறிவித்தலாக கூறப்படுகிறது.
மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றவில்லை, உண்மையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
அங்கு நோயின் பரம்பல் தடுக்க இயலாத ஒன்றாக, கைமீறிப் போய்விட்டது.
கிட்டத்தட்ட காட்டுத்தீ…
அதுவாக அணையும் வரை எரித்து சாம்பலாக்கி விட்டுத்தான் ஓயும்!

ஒரு தொற்றுநோயின் natural spread ன் நான்காம் கட்டத்தில் இத்தாலி இருக்கிறது!
அப்படியாயின் நமது நிலை?
பார்ப்போம்…

அதற்கு முதல் ஒரு கொசுறு தகவலை பார்த்து விட்டு செல்லலாம்.

?”சீனாவில் hanta virus ஆல் ஒருவர் மரணம். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிறதா…” இப்படியான தலைப்புகளை ஓரிரு நாட்களாக சந்தித்திருப்பீர்கள்.
அதென்ன hanta virus?

கொரோனாவுக்கு கிட்டத்தட்ட ஒன்றுவிட்ட அக்கா முறை. (நம்மாளுங்க தான் இருக்கிற ஆறு, குளத்தில இருந்து அம்மை நோய் வரை பெண் பெயராவே வைக்கின்றனர் என்று பார்த்தால், சீனாக்காரன், வெள்ளைக்காரனும் வைரசுக்கெல்லாம் பெண் பெயர்தான் வச்சிருக்கான். But, ஒருவிதத்துல நிறைய ஒற்றுமை இருக்கத்தான் செய்யுது..?)

பயப்பட வேண்டாம்.

கொரோனா அன்னியன் விக்ரம் என்றால், hanta அம்பி மாதிரி.
1- மனிதரில் இருந்து மனிதருக்கு நேரடியாக பரவாது.
2- தொடுகை, காற்று மூலம் பரவாது.
3- இது எலியின் சிறுநீர், மற்றும் மலம் மூலமாகவே பரவுகிறது.
( அரிசி பருப்பு & தின்பண்டங்களை அடுத்தவருக்கும் தேவைப்படும் என்ற எண்ணமில்லாமல் வாங்கி அடுக்கி வைத்திருப்போருக்கு, வீட்டில் எலி பெருகி ஒருவேளை வந்தாலும் வரலாம்.. கருட புராணத்தின் கிருமிபோஜனம்..?)

மற்றப்படி Hanta வால் மரணமாம் என்று செய்தியை கண்டால் , அதை அப்படியே ஸ்கிப் செய்து அடுத்த நியூசுக்கு செல்லுங்கள்.

இப்போதைக்கு அதனால் எந்த ஆபத்துமில்லை. ?

சரி, மீண்டும் முதல் மூன்று பந்திகளையும் வாசித்து விட்டு வந்துவிடுங்கள்.

ஒரு தொற்று நோயின் பரவுகையில் நான்கு நிலைகள் இருக்கின்றன.

1- நோயின் உள்நுழைவு – Entry..

தொற்றடைந்த ஒருவர், வெளிநாட்டில் இருந்து நம் நாட்டில் பிரவேசித்தல்.
27/ 01/ 2020 ல் எமது நாட்டின் முதலாவது நோயாளியான அந்த சீனப்பெண் அடையாளம் காணப்பட்டு, குணமாக்கி அனுப்பப்பட்டார்.

அவரால் எந்தப் பரவுகையும் இடம்பெற்றிருக்கவில்லை.
அதன் பின் 11/03/ 2020 ல் (சீனாவில் பரவத்தொடங்கி ஏறத்தாழ 3 மாதங்களின் பின்) இரண்டாவது நோயாளி இனம் காணப்பட்டார். இவர் ஒரு சுற்றுலா வழிகாட்டி.

இந்த நிகழ்வையே நாம் கொரோனாவின் உள்நுழைவுப் புள்ளியாக கொள்ளலாம்.

2- நோயானது உறுதிப்படுத்தப்பட்ட தொற்றடைந்தவரிடம் இருந்து, மற்றொருவருக்கு பரவுதல்-

இதன் போது யாரிடமிருந்து தொற்று வந்திருக்கக்கூடும் என்பது உறுதியாக தெரிந்திருக்கும்.
இதுவரை இனங்காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் இந்த நிலையிலேயே இருக்கின்றனர்.

அதாவது, ஒன்றில் வெளிநாடொன்றில் இருந்து வந்தவராகவோ, அல்லது தொற்றடைந்த ஒருவரிடம் இருந்து நேரடியாக தொற்றை பெற்றவராகவோ தான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நோயின் பரம்பல் ஒருவித மந்தகதியில் இருக்கும்.
ஆனால் ஒருநாடு விழிப்படைய வேண்டிய நிலை இது.

இந்த நிலையில் தான் “தனிப்படுத்தல்” பலனளிக்கும்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும், அவர்களோடு நேரடித் தொடர்பில் இருந்தவர்களையும் நோயின் “நோயரும்பு காலம் – incubation period” வரை (கொரோனாவை பொறுத்தவரை இது 14 நாட்கள்) தனிப்படுத்தினால், மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுக்கலாம்.

இங்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.
ஒவ்வொருவருக்கும் ஆள் போட்டு கண்காணிக்க முடியாதல்லவா…!

3- சமூகப் பரவுகை – community spread

இங்கு, தொற்றடைந்தவருக்கு தான் யாரிடமிருந்து தொற்றைப் பெற்றோம் என்பது தெரியாமல் இருக்கும், அதாவது அத்தொற்றானது சமூகத்தில் இருந்து பெறப்பட்டதாக கருதப்படும்.

அத்தொற்றைப் பரப்பியவர் இன்னும் மக்களிடையே இருந்து கொண்டு, அவரையறியாமலே நோயைப் பரப்பிக் கொண்டிருப்பார்.

இந்நிலை வந்தால் பரவுகை மடங்குகளில் நிகழும்.
இன்று 10 நோயாளிகள் இனங்காணப்பட்டால், நாளை நூறு பேர், மறுநாள் ஆயிரம் பேர் என்று ஏறிச்செல்லும்.

மரணங்களும் பெயராகச் சொல்லப்படாமல், எண்ணிக்கையில் சொல்லப்படும்.
இதன் போது சாதாரண தனிப்படுத்தல்கள் வேலைக்காகாது.

Mass isolation எனப்படும் முழு நகரங்களோ, மாகாணங்களோ தனிப்படுத்தப்படும். (சீனாவின் வூகான் மாகாணத்திற்கு நடந்தது போல).

4- இது முழுதாக நனைந்த நிலை-

நாடே சுடுகாடாயிருக்கும்.

எந்த தடுப்பு நடவடிக்கைகளும் வேலைக்காகாது.

கண்ணெதிரே மரணங்கள் நிகழ, கையாலாகாமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

வைரசில் ஏதும் மரபணு மாற்றம் நிகழ்வதன் மூலம் அதன் வீரியம் குறைந்தோ, அல்லது நோய்த்தொற்றின் பின் ஏற்படும் நோயெதிர்ப்பு சக்தி மூலமாகவோ (ஒரு தரம் அம்மை நோய் வந்தால் மறுமுறை வருவதில்லை அல்லவா, அதுபோல..) நோய் தானாகவே அடங்கினால் தான் உண்டு.

? நாம் இப்போது இரண்டாம் நிலைக்கும், மூன்றாம் நிலைக்குமிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறோம்.

இதுவரை கண்டறியப்பட்ட அனைவரும் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் என்றபோதிலும், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களாக ஏறத்தாழ 20000 பேர் நாடுமுழுவதும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் இப்போது நம்முடன் தான் இருக்கிறார்கள்.

? நாம் இப்போது சுய தனிப்படுத்தலை சரியாக கைக்கொள்ளாதிருப்பின் , நம்மருகில் இருக்கக்கூடிய அந்த ஸ்லீப்பர் செல்லின் மூலம் நமக்கும், நம்மூலம் நம் குடும்பத்துக்கும் பரவக்கூடும்.

ஒரு உதாரணத்துக்கு சொன்னால், யாழ்ப்பாணத்தில் நடந்த ஆராதனைக்கூட்டத்திற்கு சென்றோரில் நூறுபேருக்கும் மேற்பட்டோர் இன்னும் நம்மிடையே தான் இருக்கின்றனர். அவர்களை நாம் food city யிலோ, பெற்றோல் செட்டிலோ, கோயிலிலோ, பஸ்ஸிலோ சந்திக்க நேரிடலாம்.
கவனம் மக்களே, காலன் கண்ணுக்குத் தெரியாமல் கண்ணெதிரிலேயே இருக்கலாம்!

? இப்போது வரை 102 பேர் தான் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர்.
அதில் மூவர் பூரண சுகமடைந்து விட்டனர்.

ஆனால் உண்மையான புள்ளி விவரங்கள் ஏப்ரல் முதலிரு வாரங்களில் தான் தெரியவரும்.
அதன்பிறகும் நாம் இரண்டாம் நிலையில் தான் இருப்போமாயின், கொரோனாவை வென்றுவிட்டோம் என்று அர்த்தம்!

? ஆகவே,
தனித்திருப்போம்..
தள்ளியிருப்போம்!

சேர்ந்தே எதிர்கொள்வோம்!!

Dr. P. Sajeethan
Registrar/ Medicine
CNTH- Ragama.