கொரோனா பரவும் காலத்தில் தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அவதானமாகவிருப்பது அவசியம்: சிறப்பு வைத்திய நிபுணர் அரவிந்தன்

கொரோனாரத் தொற்று நோயின் பிடியில் உலகமே தவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அவதானமாகவிருப்பது அவசியமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அகஞ்சுரக்கும் தொகுதிகள் சிறப்பு வைத்திய நிபுணர் சிவமகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நீரிழிவு, இதய நோய், சுவாச நோய், அஸ்துமா போன்றவை மற்றும் புற்றுநோய்கள் ஆகியன தொற்றா நோய்களில் அடங்குகின்றன.

தொற்றா நோயுள்ளவர்கள் தங்களின் மருந்துகளை வைத்தியர்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று உள்ளெடுத்தல் மிக அவசியமாகும்.

இவ்வாறான நோயாளர்கள் தற்போதைய நிலையில் மருந்துகளை உள்ளெடுக்கத் தவறினால் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும்.

உதாரணமாக இன்சுலின் மருந்தைப் பயன்படுத்துகின்ற நீரிழிவு நோயாளியொருவர் அதனைப் பயன்படுத்தாதவிடத்து அவருக்குப் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும்.

எனவே, நோயாளர்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளைச் சிகிச்சை நிலையங்களில்( கிளினிக்) பெற்றுக் கொள்வது அவசியமாகும். யாழ். போதனா வைத்தியசாலையின் சகல சிகிச்சை நிலையங்களிலும் மருந்துகளை வழமை போலப் பெற்றுக் கொள்ள முடியும்.

வயது முதிர்ந்தவர்கள் தங்களது குடும்ப உறுப்பினரொருவரைச் சிகிச்சை நிலையக் குறிப்பேட்டுடன் ( கிளினிக் கொப்பி) அனுப்புவதன் மூலம் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளை நாடுவதற்கு எந்தவொரு தயக்கமும் தேவையில்லை. ஆனால், சாதாரணமான உடற் பிரச்சினைகளுக்கு வைத்தியசாலைக்கு வருவதை இயன்றளவு தவிர்த்தல் நன்று.

நீரிழிவு போன்ற தொற்றா நோயுள்ளவர்களுக்கு இக்காலகட்டத்தில் உணவுக் கட்டுப்பாடு இன்மை, அப்பியாசமின்மை மற்றும் மன அழுத்தத்தினால் நோய்க் கட்டுப்பாட்டு நிலைமை பாதிப்படைய நேரிடும்.

என்வே , முடிந்தவரை ஆரோக்கியமான உணவுகளை உள்ளெடுத்து, முடிந்தவரை உடற்பயிற்சி செய்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வது அவசியமாகும்.

நீரிழிவு போன்ற தொற்றா நோயுள்ளவர்களுக்கு கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் தாக்கம் சாதாரண பொதுமக்களை விட அதிகமாகவிருக்கும். எனவே, கொரோனாத் தொற்று ஏற்படாத விதத்தில் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது மிக அவசியமாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.